நடிகர் மன்சூர் அலிகானின் வீட்டுக்கு சீல்!

நடிகர் மன்சூர் அலிகானுக்கு சொந்தமான வீட்டிற்கு மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

நடிகர் மன்சூர் அலிகானின் வீட்டுக்கு சீல்!

கேப்டன் பிரபாகரன் திரைபடம் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமாகி பல திரைபடங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் ஜொலித்தவர் நடிகர் மன்சூர் அலிகான்.

நாம் தமிழர் கட்சியில் சேர்ந்து பணியாற்றிய நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் சீட் கொடுக்கவில்லை என பிப்ரவரி மாதம் தமிழ் தேசிய புலிகள் கட்சி என்ற கட்சியைத் தொடங்கி நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் சூளைமேடு மேற்கு பெரியார் பாதை பகுதியில் மன்சூர் அலிகானுக்கு சொந்தமான வீடு ஒன்றுள்ளது. நடிகர் மன்சூர் அலிகான் அரசு புறம்போக்கு நிலம் 2500 சதுர அடி அளவிற்கு அபகரித்து வீடு கட்டியதாக கடந்த 2019 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கில் நடிகர் மன்சூர் அலிகானுக்கு எதிராக தீர்ப்பு வந்ததையடுத்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அவரது சூளைமேடு வீட்டை சீல் வைத்தனர்.

இந்நிலையில் மாநகராட்சி அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்ட வீட்டின் முன் சிறிய ரக சரக்கு வாகனத்தை நிறுத்தி, சீல் வைக்கப்பட்டதை நடிகர் மன்சூர் அலிகான் மறைத்துள்ளார். மேலும், மாநகராட்சி அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டதற்கு வைக்கப்பட்ட அறிவிப்பு பலகையையும் தனது சகோதரரைக் கொண்டு மூடவைத்துள்ளார்.

இந்நிலையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த நடிகர் மன்சூர் அலிகானின் சகோதரர் ஷெரிஃப், தனது சொந்த உழைப்பில் நடிகர் மன்சூர் அலிகான் இந்த இடத்தை அப்பாவு என்பவரிடம் வாங்கி கடந்த 2000 ஆம் ஆண்டில் வீட்டைக் கட்டியுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், திடீரென இந்த இடம் அரசுப் புறம்போக்கு நிலம் எனக்கூறுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்ற அவர், அப்படியென்றால் இதே சர்வே எண்ணில் வரும் அருகிலுள்ள கட்டிடத்திற்கு ஏன் சீல் வைக்கவில்லை என கேள்வி எழுப்பினார். 
அதுமட்டுமல்லாமல் இது அரசியல் காழ்ப்புணர்ச்சியா என்பதைப் பற்றி தான் கருத்துக்கூற விரும்பவில்லை என்ற அவர், அரசும், நீதிமன்றமும் எதைச் செய்தாலும் அதை ஞாயமான முறையில் செய்யவேண்டும் எனவும் தெரிவித்தார்.