"தூய ஆவியை வைத்து காவியை எதிருங்கள்" சீமான் அறிவுரை!

"தூய ஆவியை வைத்து காவியை எதிருங்கள்" சீமான் அறிவுரை!

நீங்கள் ஏன் பாவியை வைத்து காவியை எதிர்க்க வேண்டும் தூய ஆவியை வைத்து காவியை எதிருங்கள் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

சென்னை  விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஒரு நாட்டின் வளத்தில் சிறந்த வளம் அறிவு செல்வம். அந்த அறிவை உருவாக்கின்றவர்கள் ஆசிரியர்கள். தாய்- தந்தை உலகத்தை நமக்கு காட்டுகின்றனர். ஆசிரியர்கள் தான் உலகத்திற்கு நம்மை காட்டுகின்றனர். நம்மை சிற்பி போல் செதுக்கி அறிவாளி ஆக்குவது ஆசிரியர்கள். அவர்களுக்கு ஆசிரியர்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் எனக்கூறினார்.


இதுவரை அதிமுக திமுகவிற்கு மாற்று நாம் தமிழர் தான் என்று இதுவரை கூறிவந்த நீங்கள் தற்போது இராமேஸ்வரத்தில் மோடி போட்டியிட்டால் திமுகவிற்கு நாம் தமிழர் ஆதரவளிப்பதாக கூறியுள்ளீர்களே இது முரண்பாடாக உள்ளதே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த சீமான், "இதில் முரண்பாடுகள் இல்லை. உன்மையிலே பாஜக வளரக் கூடாது என்று விரும்புகிறீர்களா? அப்படி என்றால் நான் சொல்வதை நீங்கள் கேளுங்கள். தமிழ் மக்களின் பொது எதிரியாக இந்திய காங்கிரசும், பா.ஜ.கவும் உள்ளது. இவர்கள் நம் தமிழ் நிலத்திற்கு தேவையே கிடையாது. இவர்களிடம் இவ்வளவு பெரிய நாட்டையே ஆளக் கொடுத்து, பிச்சைக்கார நாடாக மாற்றிவிட்டார்கள். எங்கள் தமிழ்நாட்டையாவது விட்டுவிடுங்கள். 

என் சொந்த நிலத்தில் மோடி போட்டி இடுவதை நான் எப்படி ஏற்பது. திமுகவினர் சீமானுக்கு ஓட்டுப்போட்டால் பாஜக வந்துவிடும் என்கின்றனர். என்னை பாஜகவினரின் பி டீம் என்றனர். ஆனால் நான் என்ன சொல்கின்றேன். என்னால், ராமநாதபுரத்தில் மோடி போட்டியிட்டால் அங்கு நாம் தமிழர் சார்பில் இஸ்லாமிய தங்கை ஒருவரை வேட்பாளராக தேர்வு செய்து வைத்து உள்ளேன். அதேநேரத்தில் மோடியை எதிர்த்து நேரடியாக உதயசூரியன் போட்டியிட்டால் நான் உதயசூரியளை ஆதரிக்கிறேன். எங்களது வேட்பாளரை திரும்பப்பெறுகிறேன். அங்கு பாஜகவை தோற்கடிப்போம் எனக் கூறினார்.  

தொடர்ந்து பேசிய அவர், திமுகவினர் கிருத்துவர் இஸ்லாமியர்களை அழைத்து பேசும்போது திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு ஒட்டு போட சொல்லுங்கள். அதிமுக-  பா.ஜ.க. கூட்டணிக்கு போடாதீர்கள் என சொல்லுங்கள். அதைவிடுத்து சீமானுக்கு ஒட்டு போடாதே என சொல்லாதீர்கள். நாம் தமிழர் கட்சி இதுவரை ஆட்சியில் இருந்து ஊழல் செய்து விட்டதா? என கேள்வி எழுப்பினார். 

மேலும், திமுக பாவியாக இருந்தாலும் காவியை எதிர்க்க அவர்களை விட்டால் வேறு வழியில்லை எனக் கூறுகிறீர்கள். நீங்கள் ஏன் பாவியை வைத்து ஏன் காவியை எதிர்க்க வேண்டும்? இந்த தூய ஆவியை வைத்து காவியை எதிர்த்து நில்லுங்கள் எனக் கூறினார். 

இதையும் படிக்க:கொடநாடு வழக்கு: தனபாலிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டம்!!