"அண்ணாமலை எத்தனை குட்டிக்கரணம் அடித்தாலும் திமுக தான் வெற்றிபெறும்" சேகர் பாபு கிண்டல்!

"அண்ணாமலை எத்தனை குட்டிக்கரணம் அடித்தாலும் திமுக தான் வெற்றிபெறும்" சேகர் பாபு கிண்டல்!

உடலை சீராக வைத்துக் கொள்ள அண்ணாமலை நடைபெற பயணம் மேற்கொள்கிறாரா என்று தெரியவில்லை. நடைபயணம் இல்லை எத்தனை குட்டிகரணம் அடித்தாலும் 40 தொகுதிகளிலும் திமுக தான் வெல்லும், என அண்ணாமலையின் நடைபயணம் குறித்து கேலியாக விமர்சித்துள்ளார் அமைச்சர் சேகர் பாபு.

சென்னை பாரிமுனை தம்பு செட்டி தெருவில், தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட  கோவிலுக்கு சொந்தமான கட்டிடத்தில் முத்துக்குமாரசுவாமி திருக்கோவில் சார்பில் அமைக்கப்பட இருக்கும் மருத்துவ மையத்தினை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்துள்ளார்.

ஆய்வுக்கு பிறகு அமைச்சர் பேசிய பொழுது, 2022-2023 ஆண்டுகளில் பக்தர்கள் அதிகம் வருகை தரும் 5 கோவில்களில் மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது என்றும் இதுவரை மொத்தமாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 15 மருத்துவமனைகள் செயல்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், தம்பு செட்டி தெருவில் உள்ள முத்துகுமாரசாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தை 1980 ஆம் ஆண்டு முதல் தனியார் ஒருவர் ஆக்கிரமித்து, சட்டவிரோதமாக 13 அங்காடிகளுக்கு வாடகைக்கு விட்டிருந்த நிலையில், சட்டபடி 10 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த இடம் மீட்கப்பட்டு உள்ளது என்றும், இந்த இடத்தில் விரைவில் மருத்துவமனை அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இதுவரை 4874 கோடி மதிப்புள்ள 5104 ஏக்கர் கோவில்களுக்கு சொந்தமான நிலம் மீட்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த அமைச்சர் வெகு விரைவில் இந்த இடம் மருத்துவமனை அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வர பட இருப்பதாக கூறியுள்ளார்.

டிஎம்கே பைல்ஸ் 2 வை அண்ணாமலை ஆளுநரிடம் வழங்கியிருப்பது குறித்து பேசும் பொழுது, " 2 அல்ல டி.எம்.கே.பைல்ஸ் 10 கொடுத்தாலும் எங்களுக்கு கவலையில்லை. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வழங்கிய பெட்டியை, ஆளுநர் இன்னும் திறந்து பார்த்தாரா? இல்லையா? என்று கூட தெரியவில்லை. எங்களுக்கு மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை" எனவும் கூறியுள்ளார்.

மேலும், உடலை சீராக வைத்துக்கொள்ள, மருத்துவர்களின் ஆலோசனையில் அண்ணாமலை நடை பயணத்தை மேற்கொள்கிறாரா? என்று தெரியவில்லை. நடைபயணம் மட்டுமல்ல, இன்னும் எத்தனை குட்டிக்கரணம் அடித்தாலும், புதுச்சேரி உட்பட நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக தான் வெற்றி பெறும்" எனவும் விமர்சித்துள்ளார்.

இதையும் படிக்க || என்.எல்.சி. விவகாரம்: "முதலமைச்சர் இரட்டை வேடம்" இ.பி.எஸ் குற்றச்சாட்டு!