அதிமுக பொதுக்குழுவில் கலந்துக்கொள்ள ஓ.பி.எஸ்-க்கு கடிதம் அனுப்பி வைப்பு!!

அதிமுக பொதுக்குழுவில் ஒற்றை தலைமை தீர்மானம் நிறைவேற்ற தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக இபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.

அதிமுக பொதுக்குழுவில் கலந்துக்கொள்ள ஓ.பி.எஸ்-க்கு கடிதம் அனுப்பி வைப்பு!!

கடந்த ஜூன் -23ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை தீர்மானத்தை நிறைவேற்ற இபிஎஸ்சும் அவரது ஆதரவாளர்களும் தீவிரமாக முயற்சித்து வந்தனர்.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தை நாடிய ஓபிஎஸ் தரப்பு, ஒற்றைத் தலைமை தீர்மானத்தை நிறைவேற்ற எதிர்ப்பு தெரிவித்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் ஒற்றைத் தலைமை தீர்மானத்தை நிறைவேற்ற தடை விதித்தது.

இந்நிலையில் வரும் 11ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு இபிஎஸ் தரப்பு அழைப்பு விடுத்துள்ளது. இந்தப் பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை தீர்மானத்தை நிறைவேற்ற அனுமதி அளிக்க கோரியும், சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்யக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.

இந்த வழக்கை விரைந்து விசாரிக்க இபிஎஸ் தரப்பு கோரிக்கை வைத்த நிலையில் நாளை விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஓபிஎஸ் தரப்பு ஏற்கனவே கேவியட் மனு தாக்கல் செய்துள்ளதால் இருதரப்பு வாதங்களை கேட்ட பிறகே உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்க உள்ளது.

இதனிடையே பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரி ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த மனுவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது. எனினும் பொதுக்குழுவை நடத்த தீவிரம் காட்டி வரும் இபிஎஸ் தரப்பு அதற்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. பொதுக்குழுவில் கலந்து கொள்ளுமாறு ஓபிஎஸ்சுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. பொருளாளர் என்ற முறையில் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.