விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை... வீடுகளுக்குள் கழிவுநீருடன் புகுந்த மழை வெள்ளம்...

நாகை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக, ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி, கடல் போல் காட்சியளிக்கின்றன.

விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை... வீடுகளுக்குள் கழிவுநீருடன் புகுந்த மழை வெள்ளம்...

தமிழகத்தின் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்குவது மட்டுமல்லாது, விவசாய நிலங்களும் நீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நாகையில் ஏற்கனவே 2 ஆயிரம் ஏக்கர் சாகுபடி செய்யப்பட்டிருந்த சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. இந்தநிலையில் நேற்று அங்கு ஆரஞ்ச் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டு, கனமழைக்கு தாயாராக இருக்க அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில், விடிய விடிய கனமழை கொட்டித்தீர்த்தது.  அதிகபட்சமாக திருப்பூண்டியில் 30 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இதுதவிர மழைநீர் வீடுகளுக்குள்ளும் புகுந்ததால், மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறி தயார் நிலையில் இருந்த நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.  

தாழ்வான பகுதியில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவுக்கு நடவு செய்யப்பட்ட சம்பா தாளடி பயிர்கள் சேதமடைந்ததால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ராட்சத மோட்டார் பம்புகள் மூலம் அதிகப்படியான நீரை வெளியேற்றி மாவட்ட நிர்வாகம் பயிர்களை பாதுகாக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர். அதுதவிர வீடுகளுக்குள் தேங்கிய நீரையும் போர்க்கால அடிப்படையில் வெளியேற்ற வேண்டும் என கோரியுள்ளனர்.
  
நாகப்பட்டினம் மாவட்டம், பாலையூர், வடகுடி, தெத்தி, செல்லூர், திருமருகல், திருக்குவளை, கீழ்வேளூர், திருமருகல் உள்ளிட்ட பகுதிகளில் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. பாலையூர் பகுதியில் விவசாய நிலம் கடல் போல் காட்சி அளிக்கின்றன. தாளடி நடவுக்கு தயாராக இருந்த நாற்றுகள் மழையில் நாசமாகி மிதந்து வருகிறது. இதனால் கடன் வாங்கி சாகுபடி செய்யப்பட்ட சம்பா தாளடி பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.