3 வது நாளாக தொடரும் கழிவுநீர் லாரி உரிமையாளர்கள் போராட்டம்.!

3 வது நாளாக தொடரும் கழிவுநீர் லாரி உரிமையாளர்கள் போராட்டம்.!
Published on
Updated on
2 min read

சென்னை குடிநீர் வாரிய நிர்வாகத்தை கண்டித்து கழிவுநீர் அகற்று ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சென்னை மற்றும் புறநகர் முழுவதும் கடந்த 10ம் தேதி தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை குடிநீர் வாரிய நிர்வாகம் Toll-free எண் முறையை கொண்டுவருவதை கண்டித்து கழிவுநீர் அகற்று ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் மூன்றாவது நாளாக கழிவு நீரை அகற்ற மறுத்து போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இதனால் சென்னை பெருங்குடி, சோழிங்கநல்லூர், நெசப்பாக்கம், கொளத்தூர், செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.

மேலும், சென்னை மற்றும் புறநகர் முழுவதும் மூன்றாவது நாளாக கழிவு நீர் லாரிகள் ஓடாததால் ஆங்காங்கே கழிவுநீர் நிறைந்து சாலையில் வழியும் அவலம் அரங்கேறியுள்ளது. இருந்தும், சுமார் 300 லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது போராட்டத்தால் பல்லாவரம்-துரைப்பாக்கம் ரேடியல் சாலை ஓரத்தில் கழிவுநீர் லாரிகள் அணிவகுத்து நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், தனியார் கழிவுநீர் லாரிகளை சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள  பார்க்கிறார்கள் என கழிவு நீர் ஊர்தி உரிமையாளர்கள் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.

இந்நிலையில், சென்னை OMR சாலையில் உள்ள சென்னை குடிநீர் வாரிய 14-வது மண்டல அலுவலகத்தில் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் 7 பேர் கொண்ட குழு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கழிவுநீர் லாரி உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com