தென் பெண்ணையாற்றில் கழிவுநீரைக் கலந்து விட்ட ஆலைகள்... கெலவரப்பள்ளி அணைக்கு வரும் நீரில் கழிவுநீர் கலப்பு...

ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து வெளியேறும் நீரில் நுரை பொங்கி எழுவதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

தென் பெண்ணையாற்றில் கழிவுநீரைக் கலந்து விட்ட ஆலைகள்... கெலவரப்பள்ளி அணைக்கு வரும் நீரில் கழிவுநீர் கலப்பு...

கர்நாடக மாநில நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழைபெய்து வருகிறது. இதனால் தென்பெண்ணை ஆற்றுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. ஆற்றிலிருந்து ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கும்  707 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. மொத்தம் 44 புள்ளி 28 அடி கொள்ளளவு கொண்ட அணையில் தற்போது 41 புள்ளி 83 அடி உயரத்திற்கு நீர் இருப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு விநாடிக்கு 640 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கர்நாடகா மாநிலத்தில்  உள்ள தொழிற்சாலைகள் தேக்கி வைத்துள்ள ரசாயன கழிவுகள் தொடர்ந்து தென்பெண்ணை ஆறு வழியாக வெளியேற்றப்படுவதாக கூறப்படுகிறது. இந்த ரசாயண கழிவு நுரைகள் ஓசூர் கெலவரப்பள்ளி அணைப் பகுதிகளில் குவிந்து காணப்படுகின்றன.

மத்திய பசுமை தீர்ப்பாயத்தின் ஆணைக்கு இணங்க, கடந்தாண்டு தென்பெண்ணை ஆற்றிலிருந்து தமிழக- கர்நாடகா மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நீர் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு எடுத்து சென்றனர். இதுவரை முடிவுகள் வெளியிடப்படாத நிலையில், தொடர்ந்து ராசயன கழிவுகள் வெளியேற்றப்பட்டு வருவது விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.