சீர்காழி : குருபூஜை விழாவை முன்னிட்டு பஞ்சபூத மகாயாகம்...! யாகத்தில் கலந்துக்கொண்ட எம்.எல்.ஏ...!

சீர்காழி : குருபூஜை விழாவை முன்னிட்டு பஞ்சபூத மகாயாகம்...! யாகத்தில் கலந்துக்கொண்ட எம்.எல்.ஏ...!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள காரைமேடு கிராமத்தில் 18 சித்தர்கள் தனித்தனி சன்னதியில் அமைந்துள்ள ஸ்ரீ சத்குரு ஒளிலாயம் பீடம் அமைந்துள்ளது. இந்த பீடத்தில் நிறுவனர் ஸ்ரீ சத்குரு ராஜேந்திர சுவாமிகளின் 5ம் ஆண்டு குருபூஜை விழா இன்று நடைபெற்றது. குருபூஜை விழாவை முன்னிட்டு ஒளிலாயம் பீடத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து பீடத்தின் வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த பிரம்மாண்ட பந்தலில் உலக நன்மைக்காக வேண்டி நிலத்திற்கு அதிபதியான தியாகேசர், நீருக்கு அதிபதியான ஜம்பு நாகேஸ்வரர், அக்னிக்கு அதிபதியான அருணாச்சலேஸ்வரர், காற்றுக்கு அதிபதியான காளகஸ்தீஸ்வரர், ஆகாயத்திற்கு அதிபதியான சிதம்பரேஸ்வரர் சுவாமிகள் அம்பாளுடன் எழுந்தருள செய்து, அவர்களுக்கு முன்பாக ஐந்து யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு பஞ்சபூத மகா யாகம் நடத்தப்பட்டது. 

பின்னர் மேலதாளங்கள் முழங்க, வேத மந்திரங்கள் ஓத பூர்ணாஹதி மற்றும் மகா தீபாராதனை நடத்தப்பட்டது. ஒளிலாயம் பீடத்தில் நடைபெற்ற குருபூஜை விழா மற்றும் பஞ்சபூத மகாயாகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய வேதாரண்யம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஓ.எஸ்.மணியன், மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளர் பவுன்ராஜ், மாவட்ட அவைத் தலைவர் பாரதி உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். யாகத்தில் கலந்து கொண்டவர்களுக்கு மங்களப் பொருட்களுடன், நெய்வேத்திய பிரசாதம் வழங்கப்பட்டது.