சிவகாசி பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து...! 2 அறைகள் இடிந்து தரைமட்டம்...!!

சிவகாசி  பட்டாசு தொழிற்சாலையில்  தீ விபத்து...!     2 அறைகள் இடிந்து தரைமட்டம்...!!

சிவகாசி அருகே  மின்னல் தாக்கியதில் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து.

சிவகாசி அருகே காளையார் குறிச்சி கிராமத்தில் திருத்தங் கலை சேர்ந்த மாடசாமி என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை- செயல்பட்டு வருகிறது. இங்குள்ள  30-க்கும் மேற்பட்ட அறைகளில் சுமார் 150 ஆண்- பெண் தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது சிவகாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான சாரல் மழையுடன் இடி மின்னல் அதிகமாக இருந்தது. பட்டாசு தொழிற்சாலையில் பேன்சி ரக பட்டாசு தயாரிக்கும் அறைகளை இடி மின்னல் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அந்த 2 அறைகள் முழுவதும் இடிந்து தரைமட்டமானது. அதிலிருந்து கிளம்பிய தீப்பொறி அருகில் உள்ள பல்வேறு அறைகளுக்கும் பரவியதில் 11 அறைகளில் இருந்த முழுமையாக தயாரிக்கப்படாத பட்டாசுகள் தீயில்  எரிந்து  சாம்பலானது. 

இதில் அந்த 11 அறைகளும் சேதம் அடைந்தது. விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு மற்றும் காவல்துறையினருடன் வருவாய்த் துறையினரும் சம்பவம் நடந்த தொழிற்சாலைக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். சாரல் மழை பெய்ய துவங்கியவுடன் பணியில் இருந்த தொழிலாளர்கள் அனைவரும் பட்டாசு  தொழிற்சாலை தயாரிப்பு அறைகளை விட்டு வெளியேறியதால் எந்தவிதமான உயிரிழப்பும் ஏற்படவில்லை. 

இதையும் படிக்க     | முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம்...எங்கெங்கு என்னென்ன ஒப்பந்தங்கள் ?

மேலும், விபத்து நடந்தவுடன் தப்பி ஓடும்போது சாணார்பட்டி சேர்ந்த காளிராஜன்( வயது 26) என்ற தொழிலாளி லேசான காயம் அடைந்தார். இந்த, விபத்து சம்பவம் குறித்து எம். புதுப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து இடி மின்னல் தாக்கியதில் விபத்து ஏற்பட்டதா? அல்லது பேன்சி ரக பட்டாசு உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் மணி மருந்து வெடித்து விபத்து நடந்ததா? என்பது போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க     | ”நான் சிகரெட் குடிப்பதை தடுத்து நிறுத்துவார்; என் மீது அளவு கடந்த அன்பு வைத்திருப்பவர்” - நடிகர் ரஜினிகாந்தின் உணர்வு பூர்வமான பேச்சு!