மழைநீரை பார்வையிட வந்த ஈபிஎஸ்...எதிராக கோஷம் எழுப்பிய திமுக நிர்வாகி!

மழைநீரை பார்வையிட வந்த ஈபிஎஸ்...எதிராக கோஷம் எழுப்பிய திமுக நிர்வாகி!

சென்னை முகலிவாக்கத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்றபோது திமுகவை சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக கோஷம் எழுப்பியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பருவமழையால் வடியாத மழைநீர்:

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், நாளுக்கு நாள் மழையின் அளவு தீவிரம் அடைந்து வருகிறது. அதன்படி, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கடந்த சில தினங்களாகவே கனமழையானது வெளுத்து வாங்கி வருகிறது. அதுவும் சென்னையில் அதிகாலையில் தொடங்கி, இரவு வரை கனமழையானது பொழிந்து வருகிறது. இப்படி தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், சென்னை அடுத்த போரூர், முகலிவாக்கம், திருவள்ளுவர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கியுள்ளது. 

ஆய்வு செய்த எடப்பாடி பழனிசாமி:

இந்நிலையில் சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட முகலிவாக்கம் ,மணப்பாக்கம், கொளப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று பார்வையிட்டார். முழங்கால் அளவிற்கு  தேங்கி நிற்கும் மழை நீரில் நடந்து சென்று பொதுமக்களை சந்தித்து, குறைகளைக் கேட்டறிந்தார். அத்துடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, மளிகைப் பொருட்கள், போர்வை, புடவை, பால் பாக்கெட் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார். 

இதையும் படிக்க: பொய்யான செய்திகளை பரப்பி வரும் திமுக அரசு...அடுக்கடுக்காக குற்றம் சுமத்திய ஈபிஎஸ்!

ஈபிஎஸ் எதிராக கோஷமிட்ட திமுக நிர்வாகி:

அப்போது முதலாவதாக, முகலிவாக்கம் திருவள்ளுவர் நகரில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்கு எடப்பாடி பழனிசாமி வந்த போது, அங்கிருந்த திமுக பெண் நிர்வாகி ஒருவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக கோஷம் எழுப்பினார். ”பத்தாண்டு காலம் அதிமுக ஆட்சியில் முகலிவாக்கம் பகுதியில் எந்த திட்டங்களையும் நிறைவேற்றவில்லை எனவும் , தற்போது பார்வையிடுவதற்காக மட்டும் எடப்பாடி பழனிச்சாமி ஏன் வந்துள்ளார் எனவும் பெண் நிர்வாகி கேள்வி எழுப்பினார்.

கேள்வி எழுப்பிய பெண் நிர்வாகி:

மேலும் தான் நினைத்தால் அமைச்சர் தாமு அன்பரசன் உடன் உடனடியாக பேச முடியும் , முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களையும் பார்க்க முடியும். ஆனால் ஒரு சாமானியன் எடப்பாடி பழனிச்சாமியை பார்க்க கூட அனுமதியில்லை என குற்றம்சாட்டி ஆவேசமாக கத்தியுள்ளார். உடனடியாக அதிமுக நிர்வாகிகள் அவரை அங்கிருந்து வெளியேற சொல்லி சத்தம் போட்டனர். இதனால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.