உச்சநீதிமன்றத்தில் மறுக்கப்பட்ட சமூக நீதி...ஆனால் நாங்கள் குரல் கொடுப்போம்...அமைச்சர் பேச்சு!

உச்சநீதிமன்றத்தில் மறுக்கப்பட்ட சமூக நீதி...ஆனால் நாங்கள் குரல் கொடுப்போம்...அமைச்சர் பேச்சு!

சமூக நீதிக்கு குரல் கொடுக்கும் ஆட்சி தான் திமுக; ஆனால் உச்சநீதிமன்றத்திலேயே சமூக நீதி மறுக்கப்படுவதால் மனுசீராய்வு செய்ய உள்ளதாக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

10% இடஒதுக்கீடு தீர்ப்பு:

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு  10% இடஒதுக்கீடு வழங்கலாம் என்ற அரசியல் சட்ட திருத்தத்திற்கு எதிராக தொடங்கப்பட்ட வழக்கில், 10% இடஒதுக்கீடு சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டது. 

அறிக்கை வெளியிட்ட மு.க.ஸ்டாலின்:

10% இடஒதுக்கீடி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் அறிக்கை வெளியிட்டனர். அதன்படி, பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10%இடஒதுக்கீட்டு முறை, சமூக நீதிக்கும், சமத்துவத்திற்கும் எதிராக அமைவதோடு, சமூக நீதிக் கொள்கைக்கு மாறானது எனவும், நூறாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு எனவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கருத்து தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்க: 10% இடஒதுக்கீடு தீர்ப்பு: தமிழக அரசு எடுத்த அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

அனைத்துக்கட்சி கூட்டம்:

இதனைத்தொடர்ந்து, 10 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக  மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் விவாதிக்க தமிழக அரசு முடிவு செய்து, அதற்கான கூட்டம் நவம்பர் 12 ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவித்துள்ளது.

சமூக நீதிக்கு குரல் கொடுக்கும் கட்சி தான் திமுக:

இந்நிலையில். சென்னை வால்டாக்ஸ் சாலையில் அமைந்துள்ள குடியிருப்புகளுக்கான இலவச மருத்துவ முகாமை, இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு துவங்கி வைத்தனர். தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு, திமுக சமூக நீதிக்கு குரல் கொடுக்கும் கட்சி என்றும், உச்ச நீதிமன்றத்திலேயே சமூக நீதி மறுக்கப்படுவதால், சீராய்வு மனு தாக்கல் செய்ய, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுடனும் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.