
தமிழ்நாட்டில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை ஆர்.கே. நகரில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75ஆவது பிறந்த கொண்டாட்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். அப்போது மேடையில் பேசிய அவர், எம்ஜிஆர் மறைந்த பிறகு அதிமுக இரண்டாக உடைந்ததாகவும், இவை அனைத்தையும் தாண்டி ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைந்ததாகவும் கூறியுள்ளார். மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது மகன் உதயநிதி ஸ்டாலினை வைத்து தன்னை வளர்த்து கொள்கிறார் என்றும், அது கட்சி அல்ல கார்ப்பரேட் கம்பெனி என்றும் விமர்சித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி இந்தியாவிலே திமுக ஆட்சி தான் என்றும், எழுதுகின்ற பேனாவை மாணவர்களுக்கு கொடுங்கள் என்றும் பேசியுள்ளார். மேலும் திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட முதியோர்கள் திட்டம் மீண்டும் அதிமுக ஆட்சியில் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்ட அவர், குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் தான் மாற்றத்தை கொண்டு வர வேண்டுமெனவும் சூளுரைத்துள்ளார். அதிமுகவை யாராலும் வீழ்த்த முடியாது எனவும் இபிஎஸ் கூறியுள்ளார்.