"சபாநாயகர் தன் மரபை மீறி செயல்படுகிறார்" இ.பி.எஸ் குற்றச்சாட்டு!

"சபாநாயகர் தன் மரபை மீறி செயல்படுகிறார்" இ.பி.எஸ் குற்றச்சாட்டு!
Published on
Updated on
1 min read

எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில் அவைத்தலைவர் தமது மரபை மீறி செயல்படுவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். 

எதிர்க்கட்சித் துணைத்தலைவர் இருக்கை குறித்து சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது ஓ.பி.எஸ் உள்ளிட்ட 3 எம்.எல்.ஏ-க்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார். 

இதற்கு விளக்கம் அளித்து பேசிய அவைத்தலைவர் அப்பாவு, இருக்கை தொடர்பாக முடிவெடுப்பது தனது அதிகாரம் எனவும், அதை பற்றி பேச யாருக்கும் அனுமதி இல்லை என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து எதிர்க்கட்சித் துணைத்தலைவர் இருக்கை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டிருந்த போது ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் பேச முற்பட்டதால் கூச்சல் குழப்பம் நிலவியது.  பின்னர் அவைத்தலைவர் இருக்கை முன்பு அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை காவலர்கள் அவர்களை வெளியேற்றினர். 

இதனிடையே சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பி.எஸ் உள்ளிட்ட 3 எம்.எல்.ஏ-க்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என 10 முறை அவைத்தலைவரிடம் அதிமுக சார்பில் கடிதம் கொடுத்துள்ளதாக கூறினார்.  நீதிமன்ற தீர்ப்பின் நகலை வழங்கியும் அவைத்தலைவர் நடவடிக்கை எடுக்காமல் உள்ளார் எனவும் குற்றம்சாட்டினார்.எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில் அவைத்தலைவர் தமது மரபை மீறி செயல்படுவதாகவும் சாடினார். 

இருக்கை ஒதுக்கீடு குறித்த கோரிக்கைகளை ஏற்காதது ஏன் என அவைத்தலைவர் தெளிவுபடுத்த வேண்டும் என தெரிவித்தார். மேலும், ஓ.பி.எஸ் உள்ளிட்ட 3 எம்.எல்.ஏ-க்களை கட்சி சாராதவர் என அறிவிக்க வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்தார். 

இதனிடையே சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், துணை தலைவர் இருக்கை விவாகரத்தில் சபாநாயகர் எவ்வித விதிமீறலிலும் ஈடுபடவில்லை என தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com