வைரஸ் காரணமாக இருமல் பாதிப்பு அதிகரிப்பு - மா.சுப்பிரமணியன்

வட கிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

பருவ மழைக்கால நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் நோக்கில் வாரம்தோறும் சனிக்கிழமைகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, சென்னை ராயப்பேட்டை அம்மையப்பன் லேன் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார். சுகாதாரத்துறை செயலர் ககன் தீப் சிங் பேடி, மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், வட கிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருவதாக கூறியவர், இதுவரை எட்டாயிரத்து 380 முகாம்கள் நடைபெற்றுள்ளதாக தெரிவித்தார். தற்போது வழக்கமான காய்ச்சல் பாதிப்பு உள்ளதாகவும், வைரஸ் பாதிப்பு காரணமாக இருமல் பாதிப்பு அதிகமாக உள்ளதாகவும் கூறினார்.

இதனைத் தொடர்ந்து, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பல்வேறு புதிய கட்டமைப்புகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தென் இந்தியாவிலேயே அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 20 ஆயிரம் புறநோயாளிகள் வரும் மருத்துவமனையாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை திகழ்வதாக கூறினார். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com