கார்த்திகை மாத பிரதோஷத்தை ஒட்டி சிவாலயங்களில் சிறப்பு பூஜை...!

Published on
Updated on
1 min read

கார்த்திகை மாத பிரதோஷத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. 

உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் மாதம் இருமுறை பிரதோஷ வழிபாடு வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அதேபோல் கார்த்திகை மாதத்தின் முதல் பிரதோஷத்தை ஒட்டி பெருவுடையாருக்கு ஏற்ற பெருநந்திக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், திரவிய பொடி, கரும்புச்சாறு, எலுமிச்சை சாறு உள்ளிட்ட 9 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட நந்தியம் பெருமானுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாக விளங்கும் திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேசுவரி உடனுறை ஜம்புகேசுவரர் கோயிலில் நந்தி பெருமானுக்கு பஞ்சாமிர்தம், பால், தயிர், சந்தனம், மஞ்சள், பன்னீர், இளநீர், திரவியபொடி உள்ளிட்ட வாசனை திரவியங்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் வில்வ இலைகளை சாத்தி வழிபாடு செய்தனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண கோவிலில் கார்த்திகை மாத பிரதோஷத்தை முன்னிட்டு சங்கரலிங்க சுவாமி சன்னதி முன்பு வீற்றிருக்கும் ஸ்ரீ நந்தியம் பெருமானுக்கு மஞ்சள், பால், பன்னீர், விபூதி, சந்தனம் இளநீர் உட்பட பல்வேறு நறுமண திரவிய பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட நிலையில் சோடசை தீபாராதனை நடைபெற்றது.

காரைக்கால் அடுத்த திருநள்ளாறு ஸ்ரீசனிபகவான் ஆலயத்தில் கார்த்திகை மாத  வளர்பிறை பிரதோஷ பூஜையை ஒட்டி நந்தி பெருமானுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்றது. இதில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீலஸ்ரீ கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பகவானை வழிபட்டனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com