வதந்திகளைப் பரப்பி அரசுப் பள்ளிகளைப் நலிவுபடுத்தும் முயற்சியை கைவிடவேண்டும் - பிரின்ஸ் கஜேந்திரபாபு!

வதந்திகளைப் பரப்பி அரசுப் பள்ளிகளைப் நலிவுபடுத்தும் முயற்சியை கைவிடவேண்டும் - பிரின்ஸ் கஜேந்திரபாபு!

வதந்திகளைப் பரப்பி அரசுப் பள்ளிகளைப் நலிவுபடுத்தும் முயற்சியை கைவிடவேண்டும் என பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ”அரசுப் பள்ளிகள், ஆசிரியர்கள் மீது நம்பிக்கையை இழக்கவைக்கும் சூழ்ச்சிகளை முறியடித்து குழந்தைகள் ஆர்வமுடன்  மகிழ்ச்சியாகப் பள்ளிக்குச் செல்வதை உறுதிசெய்ய வேண்டும்” என்று குறீப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசு பல்வேறு ஆக்கமிகுந்த நடவடிக்கைகள் வாயிலாக அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பல்வேறு வாய்ப்புகளையும், வசதிகளையும் செய்து வருகிறது. அரசுப் பள்ளி ஆசிரியர்களில்  மிகப் பெரும்பான்மையினர் பணி ஈடுபாட்டு உணர்வுடன் குழந்தைகளுக்குத் தொண்டு செய்வதற்குக் கிடைத்த அரிய வாய்ப்பாகத்  தங்கள்  பணியைக் கருதிச் செயல்பட்டு வருகின்றனர்.

ஒவ்வொரு துறையிலும் சில தவறான போக்குடையவர்கள் இருப்பதைப் போலவே, ஆசிரியர் பணியிலும், ஆசிரியர் பணிக்கு சற்றும் பொருத்தமில்லாதவர்கள் ‘கல்வித் தகுதி' யின் அடிப்படையில் ஆசிரியராகப் பணியமர்வு பெற்றுவிடுகின்றனர். அத்தகையோர் செய்யும் தவறான செயல்கள் குறித்த புகார் எழுந்தவுடன், உரிய முறையில் விசாரணை நடத்தி அவர்களைப் பணியில் இருந்து நீக்கவும், அவர்களுக்குச் சட்டப்படியான தண்டனையைப் பெற்றுத் தரவும் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

நடந்த தவற்றை வாய்ப்பாகப் பயன்படுத்தி, பொதுவெளியில் அரசுப் பள்ளி மீதும், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீதும் அவதூறு பரப்பும் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் சமூகத்திற்கு மிகப் பெரிய துரோகத்தைச் செய்கின்றனர். அவர்களின் செயல்பாடு அரசுப் பள்ளிகளை அழிக்கும் உள்நோக்கத்துடன் நடக்கிறது என்பதை உணரவேண்டும்.

பள்ளிக்கூடத்திற்கும் பள்ளிக்கும், உண்மையாக உழைக்கும் ஆசிரியர்களைப் பழிவாங்கும் நோக்குடன், பள்ளியில் நடக்கும் நிகழ்ச்சிகள் அல்லது செயல்பாடுகளைத் தங்களின் பழிவாங்கும் நோக்கத்திற்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளச் சிலர் முயலுகின்றனர். காழ்ப்புணர்ச்சியோடு செயல்படும் அவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தீய எண்ணத்துடன் நடத்தப்படும் தவறான பரப்புரையைத் தொடக்கத்திலேயே தடுக்கவில்லையென்றால் மாணவர்களும், பெற்றோர்களும் மிகப் பெரும் அச்சத்திற்கும், குழப்பத்திற்கும் உள்ளாவார்கள். பள்ளியில் மாணவர்கள் வருகை குறையும், நேர்மையாகப் பணியாற்றிய அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மனத்தளவில் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். இத்தகைய சூழலில் அரசும், மக்களும் நேர்மையான ஆசிரியர்கள் பக்கம் இருக்க வேண்டும்.                                                                        

பள்ளியில் ஒரு விரும்பத்தகாத நிகழ்ச்சி நடந்துள்ளதென்றால் அது குறித்து முழுமையான விசாரணை நடத்தி உண்மையை அனைவருக்கும் விளக்க‌ வேண்டும். விசாரணை நேர்மையாக எந்தவித வெளித் தலையீடும் இல்லாமல் நடக்க வேண்டும். விசாரணை என்ற பெயரில் பள்ளிக்கு தொடர்பில்லாதவர்கள் பள்ளிக்குள் சென்று மாணவர்களை விசாரிப்பது, பெற்றோர்கள், பொதுமக்களிடம் அவதூறு பரப்புரை, பொய் குற்றச்சாட்டுகளைக் குறிப்பிட்ட ஆசிரியர் மீது சுமத்துவது ஆகியவற்றை எந்த காரணம் கொண்டும் அனுமதிக்க இயலாது.  அரசும், மாவட்ட நிர்வாகமும் இதில் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலை, வீரப்பனூர் ஊராட்சி, அரசவெளி கிராமம், அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளியில் படித்த மாணவர், சிகிச்சைக்காக மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு இறந்துள்ளார்.  இறப்பிற்கான காரணம், முறைப்படியான காவல்துறை விசாரணை, மருத்துவமனை அறிக்கை, உடற்கூறு ஆய்வறிக்கை ஆகியவை முழுமையாக பரிசீலிக்கப்பட்டு, முழு விசாரணைக்குப் பிறகே உண்மையைச் சான்றின் அடிப்படையில்  நிரூபிக்க முடியும்.

அந்தப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவரை‌ப் பழிதீர்ப்பதற்காக , நடந்த நிகழ்ச்சியை‌ச் சாதமாகப் பயன்படுத்த சிலர் முயலுவது மிகவும் வேதனைக்குரியது: கண்டிப்பிற்குமுரியது.

தங்கள் பள்ளிக்கும், பள்ளி மாணவர்களுக்கும் தொண்டு செய்வதைத் பெரும் பெயராகவும் தவமாகவும்  மேற்கொள்ளும் நல்ல ஆசிரியரைக் காயப்படுத்தி, அவரை அப்பள்ளியில் இருந்து அப்புறப்படுத்த, நடந்த சம்பவத்தை தனியொருவர் ‌தமக்குச் சாதகமாக பயன்படுத்துவதை அனுமதிக்க‌ இயலாது.

இடையூறு இல்லாமல் விசாரணை நடக்க வேண்டும். அரசு துறைகளின் விசாரணை நடக்கின்றபோதே, பள்ளிக்குத் தொடர்பில்லாதவர்கள் பள்ளியில் மாணவர்களிடமும், அவர்தம் பெற்றோர்களிடமும் விசாரணை என்ற பெயரில் பொய்க் குற்றச்சாட்டுகளை மீண்டும் மீண்டும் பரப்ப முயற்சி செய்வதை அரசு உடனடியாகத் தடுக்க வேண்டும். தனிப்பட்டவர்களின் இத்தகைய தவறான நடவடிக்கை உளவியல் அடிப்படையிலான தாக்கத்தை மாணவர்களிடம்  ஏற்படுத்துவதோடு, குழந்தைப் பருவத்தில் அவர்களைத் தேவையற்ற அச்சத்திற்கு உள்ளாக்கும்.

உள்நோக்கத்துடன் செயல்படும் ஒருவரின்  தவறான பரப்புரைகள், நேர்மையான ஆசிரியர்களைக் காயப்படுத்தும் என்பது மட்டுமல்லாமல், பள்ளியின் மீது‌ அச்சத்தை‌யும், அவநம்பிக்கையையும் ஏற்படுத்தி மாணவர்கள் பள்ளியில் இருந்து விலகிச் செல்லும் சூழலை உருவாக்கும்.

அரசுப் பள்ளிகளின் வளர்ச்சியில் ஊடகங்களுக்கு மிகப் பெரிய பங்குண்டு.‌
பொறுப்பு மிக்க  ஊடகங்கள் பரபரப்புச் செய்தியாக இதை அணுகாமல், முழு விவரம் அறிந்த பிறகு உண்மையை மக்களுக்குத் தெளிவுப்படுத்த வேண்டும்.‌

"வாய்மையே வெல்லும்" என்ற நம்பிக்கையையுடன் பள்ளிக்கும், பள்ளியில் மாணவர்களை நேசிக்கும், நல்ல ஆசிரியர்களுக்கும் ஆதரவாக ஜவ்வாது மலை கிராமங்களில் வசிக்கும் மக்கள் நிற்க‌ வேண்டும்.

தங்களின் பள்ளி மீது வைத்திருக்கும் நம்பிக்கையை இழக்காமல், தம் குழந்தைகளைப் பள்ளிக்கூடம்  பாதுகாப்பாகப் பேணிக் காத்துக் கொள்ளும் என்னும் முழு நம்பிக்கையுடன் மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிக்குத் தொடர்ந்து செல்வதை உறுதிசெய்ய வேண்டும்.

அரசும், மாவட்ட நிர்வாகமும் விசாரணை வாயிலாக உண்மையை மக்களுக்குத் தெரியப்படுத்துவதோடு, பழித்துரைக்கும் பரப்புரையைத் தடுத்திட வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது இவ்வாறு பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.