ஆதார் இணைப்பு: லஞ்சம் வாங்கினால்...அதிகாரிகளை எச்சரித்த மின்வாரியம்...!

ஆதார் இணைப்பு: லஞ்சம் வாங்கினால்...அதிகாரிகளை எச்சரித்த மின்வாரியம்...!

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியின் போது பொதுமக்களிடம் பணம் வாங்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகளுக்கு மின்சார வாரியம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்:

தமிழகத்தில் மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வலியுறுத்தியிருந்தார். தற்போது அதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே, பொதுமக்கள் எளிதில் இந்த பணிகளை மேற்கொள்ள மின்சார வாரியம் தமிழக முழுவதிலும் உள்ள 2811 பிரிவு அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்களை அறிவித்தது. அதன்படி, நேற்று முதல் இந்த சிறப்பு முகாம்களில் ஆதார் எண்களை இணைக்கக்கூடிய பணிகளை பொதுமக்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க: டீ விற்றவன் கையில் நாடு..! அனல் பறக்கும் இறுதிகட்ட குஜராத் தேர்தல் பிரச்சாரம்.. !

ஒரே நாளில் இவ்வளவு இணைப்புகளா?:

இந்த சிறப்பு முகாம் அறிவிக்கப்பட்ட நேற்று ஒரே நாளில் மட்டும் 5 லட்சம் மின் இணைப்புகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருப்பதாக மின்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. அதேபோன்று, மின்வாரிய இணையதளத்தை பயன்படுத்தி இதுவரை 15 லட்சத்து 90 ஆயிரம் இணைப்புகளும், மின் கட்டண வசூல் மையங்கள் மூலம் மூன்று லட்சத்து 32 ஆயிரம் இணைப்புகளும் இணைக்கப்பட்டிருப்பதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இதன் மூலம், இதுவரை 19 லட்சத்து 23 ஆயிரத்து 688 மின் இணைப்புகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருப்பதாக மின்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

அதிகாரிகளுக்கு மின்வாரியம் சுற்றறிக்கை:

இந்நிலையில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக மின்சார வாரியம் சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு முகாம்களை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு செய்தார். அதற்கு பிறகு, அமைச்சர் செந்தில்பாலாஜியின் உத்தரவுப்படி அதிகாரிகளுக்கு மின்வாரியம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது. அந்த சுற்றறிக்கையில், சிறப்பு முகாம்களுக்கு வரும் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும், ஆதார் எண் இணைப்பு பணி நடைபெறும் போது கணினியில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால் மாற்று ஏற்பாடாக கணினிகள் தயாராக வைத்திருக்க வேண்டும் எனவும், காலை 10.30 மணி முதல் மாலை 5.15 வரை நடைபெறும் முகாம்களுக்காக மின்வாரிய அதிகாரிகள் உணவு இடைவேளை, தேநீர் இடைவேளியின்றி பணியாற்ற உத்தரவிட்டுள்ளது.

எச்சரிக்கை:

மேலும், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் அவசியம் குறித்த விவரங்கள் பிளக்ஸ் போர்டுகள் மூலமாக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும், இணைப்பு பணியை மேற்கொள்வதற்காக நுகர்வோர்களிடம் பணம் பெற்றதாக புகார் வந்தால் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அனைத்து மண்டல பொறியாளர்களுக்கு மின்சார வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.