கரூர் பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் திடீர் திருப்பம்..!

பள்ளி ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதால் பரபரப்பு..!

கரூர் பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் திடீர் திருப்பம்..!

கரூரில் பாலியல் துன்புறுத்தலால் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் திடீர் திருப்பமாக, அதே பள்ளியை சேர்ந்த ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் வெண்ணெய்மலை தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி, திடீரென தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மாணவி எழுதிய கடிதம் கிடைத்தது. அதில், பாலியல் வன்கொடுமையால் சாகும் கடைசி பெண் தாமாக இருக்க வேண்டும் என்றும், தம்மை யார் இந்த முடிவை எடுக்க வைத்தார்கள் என்பதை கூற பயமாக இருப்பதாகவும் மாணவி குறிப்பிட்டிருந்தார். இந்த விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டறிய முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

இந்நிலையில், மாணவி படித்த பள்ளியின் கணித ஆசிரியர் சரவணன், திருச்சி மாவட்டம் துறையூர் அருகே செங்காட்டுப்பட்டியில் உள்ள தமது மாமனார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தமது தந்தைக்கு உடல்நிலை பாதிப்பு என கூறி, அரை நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு, கரூரில் இருந்து திருச்சி சென்று உயிரை மாய்த்துள்ளார். எதற்காக இவர் தற்கொலை செய்து கொண்டார்?  மாணவி கடிதத்தில் குறிப்பிட்ட நபர் இவர்தானா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.