பொங்கல் பரிசுத் தொகுப்பில்...இதையும் சேர்க்க வேண்டும்...டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்!

பொங்கல் பரிசுத் தொகுப்பில்...இதையும் சேர்க்க வேண்டும்...டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்!

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பு சேர்த்து வழங்க வேண்டும்; உழவர்களின் நலன்களை காக்க வேண்டும்  என  பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தனது ட்விட்டர் மூலம் வலியுறுத்தியுள்ளார். 

பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிப்பு:

தைப் பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசியும், ஒரு கிலோ சர்க்கரையும், 1000 ருபாய் ரொக்கப்பணமும் வழங்கப்படும் என தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அத்துடன், பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை ஜனவரி மாதம் 2 ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாகவும் தமிழக அரசு அறிவித்தது.

டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்:

இந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பு சேர்த்து வழங்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 

1. தமிழ்நாட்டில் தமிழர் திருநாளையொட்டி,  அரிசி அட்டை வைத்திருக்கும் குடும்பங்களுக்கு  தமிழக அரசு அளிக்கவிருக்கும் பரிசுத் தொகுப்பில் பொங்கல் கரும்பு வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது. இது கரும்பு உழவர்கள் நலனை கடுமையாக பாதிக்கும்!

2. தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே  பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டும் அதே நடைமுறையே தொடரும்; அரசு கொள்முதல் செய்யும் என்ற நம்பிக்கையில் லட்சக்கணக்கான ஏக்கரில் உழவர்கள்  பொங்கல் கரும்பு சாகுபடி செய்திருக்கின்றனர்!

3. பொங்கல் கரும்பை வேறு எதற்கும் பயன்படுத்த முடியாது. பொங்கலுக்கு இன்னும்  3 வாரங்களே உள்ள நிலையில் தமிழக அரசு கொள்முதல் செய்யவில்லை என்றால் வெளிச்சந்தையில் கரும்பு விலை வீழ்ச்சியடையும். அந்த விலைக்கு விற்றால்  விதை வாங்கிய செலவைக் கூட உழவர்களால் ஈடு செய்ய முடியாது!

4. பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதில் கடந்த ஆண்டு குளறுபடிகள் நடந்தது உண்மை.  அதற்கு நிர்வாகத்தில் நடந்த தவறுகள் தான் காரணம் ஆகும். அதைக் காரணம் காட்டி பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு வழங்குவதை நிறுத்தியதால், உழவர்கள் தான் நேரடியாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர்!

5. ஜனவரி 2-ஆம் தேதி முதல் வழங்கப்படவுள்ள பரிசுத் தொகுப்பில் கரும்பை அரசு சேர்க்க வேண்டும். ஒரு கரும்பு ரூ.35 என்ற விலையில் தமிழக அரசே உழவர்களிடமிருந்து நேரடியாக பொங்கல் கரும்பை கொள்முதல் செய்ய வேண்டும். அதன் மூலம் உழவர்கள் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்! என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.