அமைச்சர் - டெட் ஆசிரியர்கள் பேச்சுவார்த்தை தோல்வி!

அமைச்சர் - டெட் ஆசிரியர்கள் பேச்சுவார்த்தை தோல்வி!
Published on
Updated on
1 min read

டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி முதல் டெட் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரத போரட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையிலுள்ள பேராசிரியர் அன்பழகன் நினைவு வளாகத்தில் நடந்து வந்த இப்போராட்டத்தின் 9 வது நாளில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். இதனையொட்டி, போராட்டத்தினை ஒத்தி வைப்பதாக அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில் சமீபத்தில், பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனத்திற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. இதில் அரசாணை 149ஐ ரத்து செய்வது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனை எதிர்த்து டெட் தேர்வை முடித்தவர்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்தனர். 

இந்த நிலையில், டெட் தேர்வு முடித்தவர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் இன்று காலை பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் இப்பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை. இதனைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக ஈரோட்டில் தொடர் போராட்டத்தை முன்னெடுக்க போவதாக டெட் தேர்வு முடித்த ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.

மேலும், திமுக கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதியில், அரசாணை 149 ஐ ரத்து செய்வதாக தெரிவித்துவிட்டு, இப்போது தங்களை ஏமாற்றி விட்டதாக டெட் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற  ஆசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com