திமுக-காரர்  போல பேசுரீங்க...! பத்திரிக்கையாளர் கேள்வி...! திருமா கோவம்...!! 

திமுக-காரர்  போல பேசுரீங்க...! பத்திரிக்கையாளர் கேள்வி...! திருமா கோவம்...!! 

திமுகவினர் போன்று பேசுவதாக பத்திரிக்கையாளர் கேள்வி எழுப்பியதால் கோவமடைந்த திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பை பாதியில் நிறுத்தி வைத்துள்ளார்.

முன்னாள் காங்கிரஸ் கட்சித்தலைவரும் பட்டியலினத்தவருக்கான உரிமைகளுக்காக போராடியவருமான எல்.இளைய பெருமாளுக்கு நினைவரங்கம் ஒன்றை சிதம்பரம் நகரில் அமைக்கப்படும் என்று நேற்று  முதல்வர் அறிவித்திருந்தார். இதற்காக விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் நன்றி தெரிவித்தார்.

இதன் பின்னர் செய்தியாளரை சந்தித்த அவர், இளையபெருமாள் தேசிய அளவில் ஒடுக்கப்பட்ட மக்கள், பழங்குடி மக்களின் வாழ்நிலைகளை ஆய்ந்து இந்திய ஒன்றிய அரசுக்கு அறிக்கை அளித்தவர். அவருடைய பெயரிலேயே இளையபெருமாள் கமிட்டி நிறுவப்பட்டது என்பதை சுட்டிக் கட்டிய அவர் அந்த பரிந்துரைகளின் அடிப்படையில் தான் வன்கொடுமை தடுப்பு சட்டம் நிறைவேற்றப்பட்ட தாக தெரிவித்தார். இன்றைக்கும்  இந்திய அளவில் ஒடுக்கப்பட்ட, பழங்குடியினரின் பாதுகாப்புக்கு அவர்களின் நலன்களின் மீதான அரசின் திட்டங்களுக்கு இந்த கமிட்டியின் பரிந்துரை மிகுந்த பயனுள்ளதாக இருப்பதாக தெரிவித்தார்.
  
 அவருடைய பங்களிப்பை போற்றக்கூடிய வகையிலும் முதலமைச்சர் அவருடைய நினைவாக சிதம்பரத்தில் இந்த நூற்றாண்டு விழாவையொட்டி நூற்றாண்டு நினைவு அரங்கம் அமைப்பதற்கு அறிவித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருவதாக கூறினார்.மேலும்,  சில நிமிடங்களில் தலித் கிறிஸ்தவர் தொடர்பான தனி தீர்மானம் ஒன்றை முதலமைச்சர் முன்மொழிய சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட இருப்பதாக தெரிவித்தார். இந்த அறிவிப்புகள் மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக கூறிய அவர் ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பில்   முதல்வரை நேரில் சந்தித்து நன்றியை தெரிவித்ததாக கூறியுள்ளார். 

இதைத் தொடர்ந்து கேள்வி எழுப்பிய செய்தியாளர் ஒருவர் "நீங்கள் திமுகவினர் போன்று பேசுகிறீர்கள்" எனக் கேட்க, கோவமடைந்த தொல்.திருமாவளவன், பத்திரிகையாளர்கள் நாகரிகமாக கேள்வி கேட்க வேண்டும் எனவும் அநாகரிகமாக கேள்வியை கேட்கக்கூடாது எனவும் தெரிவித்தார். மேலும் அதிமுக கூட்டணிகளே எதிர்கட்சிகளாக இருந்தாலும் இதுவரை பத்துக்கும் மேற்பட்ட போராட்டங்கள் அரசை எதிர்த்து விசிகவே நடத்தி இருப்பதாகவும் நாளை கூட போராட்டம் நடைபெற இருப்பதாகவும் தெரிவித்தார். திமுக காரன் போல செயல்படுவதாக கூறுவது அநாகரிகம் என பேசிய அவர் அதற்கு தனது கண்டனத்தை செய்தியாளருக்கு தெரிவித்தார். இதனால் பத்திரிக்கையாளர் சந்திப்பை பாதியில் நிறுத்திக் கொண்டார்.