
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவு செய்யும் கோவின் இணையதளத்தில் தமிழ் மொழி சேர்க்கப்பட்டு உள்ளது.
தடுப்பூசி போடப்படும் இடங்கள், தடுப்பூசி போடப்பட்டுள்ள விவரங்களை அறிந்துகொள்வதற்கும், தடுப்பூசி செலுத்த முன்பதிவு செய்வதற்கும் மத்திய அரசு சார்பில் கோவின் என்ற இணையதளம் தொடங்கப்பட்டது.
ஆண்ட்ராய்டு மொபைல் போன்களுக்கு ஏற்ற வடிவில் செயலியாகவும் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், இந்த கோவின் இணையம் மற்றும் செயலியில் தொடக்கத்தில் ஆங்கிலம் மற்றும் இந்தி மட்டுமே பயன்பாட்டு மொழியாக இருந்தன.
பின்னர் மராத்தி, மலையாளம், பஞ்சாபி, தெலுங்கு, குஜராத்தி, அசாமி, வங்காளம், கன்னடா, ஒடியா ஆகிய 9 மொழிகளும் சேர்க்கப்பட்டன. ஆனால், தமிழ் மொழி சேர்க்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், தமிழார்வலர்களும் கண்டனம் தெரிவித்த நிலையில், உடனடியாக தமிழ்மொழி சேர்க்கப்பட வேண்டும் என, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
அதற்கு, கோவின் இணைய வசதி படிப்படியாகப் பல்வேறு மாநில மொழிகளில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், இதன் அடுத்தகட்டத்தில் இரண்டு நாட்களுக்குள் தமிழ் மொழியிலும் இந்த வசதி செயல்படுத்தப்படும் என்றும் மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், இன்று கோவின் இணையதளத்தில் தமிழ் மொழி சேர்க்கப்பட்டுள்ளது.