அ.தி.மு.க.வின் தற்காலிக அவைத்தலைர் தமிழ்மகன் உசேன் யார்..?

அதிமுகவின் தற்காலிக அவைத்தலைவராக தமிழ் மகன் உசேன் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ் மகன் உசேன் யார் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அ.தி.மு.க.வின் தற்காலிக அவைத்தலைர் தமிழ்மகன் உசேன் யார்..?

அதிமுகவின் அவைத்தலைவராக இருந்த மதுசூதனன் கடந்த சில மாதங்களுக்கு முன், உடல்நலக்குறைவு காரணமாக காலமானதையடுத்து அடுத்த அவைத்தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்து கடந்த சில மாதங்களாக அதிமுக தலைமை தொடர் ஆலோசனை மேற்கொண்டது.

இந்த நிலையில், இன்று நடைபெற்ற அதிமுகவின் செயற்குழு கூட்டத்தில், அதிமுகவின் தற்காலிக அவைத்தலைவராக தமிழ் மகன் உசேனை நியமித்து அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ் மகன் உசேன் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். எம்.ஜி.ஆர். கட்சித் தொடங்கிய நாள் முதல் இன்று வரை அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வருகிறார். 

அதிமுக கட்சி  தொடங்கும் போது எம்.ஜி.ஆர் உடன் கையெழுத்திட்ட 11 நபர்களில் இவரும் ஒருவர் ஆவார்.* * கன்னியாகுமரி மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளராக முதன் முறையாக நியமிக்கப்பட்டவர். 17 வருடம் மாவட்ட செயலாளராக இருந்தவர்.  47 வருடம் எம்.ஜி.ஆர் மன்றத்தின் செயலாளராக பதவி வகித்து வருபவர்.

2011ம் ஆண்டு அகில உலக எம்.ஜி.ஆர் மன்றத்தின் செயலாளராக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் நியமனம் செய்யப்பட்டார்.  2012ல் ஆட்சி மன்ற குழு உறுப்பினராகவும், வக்பு வாரிய குழு தலைவராகவும் நியமனம் செய்யப்பட்டார்.

குமரி மாவட்ட எல்லை போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர். தற்போது வரை எல்லை போராட்ட வீரருக்கான உதவித்தொகை பெற்று வருகிறார். பொது வாழ்க்கையில் எம்.ஜி.ஆர் மன்ற செயலாளராக கடந்த 68 ஆண்டுகளாக அதிமுகவில் இருந்து வருபவர்.  2021ம் ஆண்டிற்கான தந்தை பெரியார் விருது தமிழ் மகன் உசேனுக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்மகன் உசேன். இவர் 1970களில் அரசு பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் 1972 ஆம் ஆண்டு திமுக ஆட்சியின் போது அக்கட்சியிலிருந்து எம்ஜிஆர் வெளியேற்றப்பட்டார்.  அப்போது போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்த தமிழ்மகன் நாகர்கோவிலில் இருந்து திருச்சிக்கு பஸ்ஸை ஓட்டி சென்றார். மதுரை மேலூர் அருகே சென்ற போது சாலையில் ஒரு கூட்டமாக இருந்ததை கண்டு பேருந்தை நிறுத்தினார் தமிழ்மகன்.  திமுகவில் இருந்து அப்போது அங்கிருந்தவர்களிடம் விசாரித்த போது எம்ஜிஆரை திமுகவிலிருந்து நீக்கப்பட்டதாக செய்தி ரேடியோவில் ஒலிபரப்பாவதாக தெரிவித்தனர். இதையடுத்து உடனடியாக பேருந்தை விட்டு இறங்கிய தமிழ்மகன் எம்ஜிஆரை நீக்கிய ஆட்சியில் ஓட்டுநராக இருக்க நான் விரும்பவில்லை என ராஜினாமா கடிதத்தை எழுதி கண்டக்டரிடம் கொடுத்தார். 

எம்ஜிஆரை சந்திக்க சென்னை வந்த அவர்  ராமாவரம் தோட்டத்தில் எம்ஜிஆரை சந்தித்து தனிக் கட்சி தொடங்க வேண்டும் என்றார். முதல் மாவட்ட அமைப்பாளர் அவருடன் சத்யா ஸ்டுடியோவில் ஆலோசனையில் ஈடுபட்ட நிர்வாகிகளில் தமிழ்மகனும் ஒருவர்.  எம்ஜிஆர், ஜெயலலிதாவின் விசுவாசியாக இருக்கும தமிழ்மகனின் விசுவாசத்தையும் சேவையையும் கவுரவிக்க அவரது மகன் ஷேக் உசேனிற்கு ஜெயலலிதா பி.ஆர்.ஓ. பதவி கொடுத்து அழகு பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.