தென்காசி தொகுதி: தபால் வாக்குகள் இன்று மறு எண்ணிக்கை; வெல்லப்போவது யார்!

தென்காசி தொகுதி: தபால் வாக்குகள் இன்று மறு எண்ணிக்கை; வெல்லப்போவது யார்!

தென்காசி சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றியை எதிர்த்து அதிமுக தொடர்ந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவுப்படி இன்று தபால் வாக்கு மறு எண்ணிக்கை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெறுகிறது.

தென்காசி சட்டமன்ற தொகுதியில் கடந்த 2021ம் ஆண்டு நடந்த தேர்தலில் 18 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில் இயந்திர வாக்கு எண்ணிக்கையின் முடிவில் அதிமுக வேட்பாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடாரை விட 565 வாக்குகள் அதிகம் பெற்றிருந்தார்.

இதனைத் தொடர்ந்து தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. மொத்தம் உள்ள 2589 தபால் வாக்குகளில் காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடாருக்கு 1,609 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியனுக்கு 674 வாக்குகளும் பெற்றனர். இதன் மூலம்  காங்கிரஸ் கட்சியின் பழனி நாடார் 89,315 வாக்குகளும், அதிமுக.வின் செல்வமோகன்தாஸ் பாண்டியன்  88,945 வாக்குகளும் பெற்றனர்.

இதன் மூலம் 370 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தபால் வாக்குகள் எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி அதிமுக வேட்பாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரனை செய்த நீதிபதி ஜெயச்சந்திரன் கடந்த 5ம் தேதி பரபரப்பு தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில் தென்காசி சட்டமன்றத் தொகுதியில் பதிவான தபால் வாக்குகளை 10 நாட்களுக்குள் எண்ணி முடிவை அறிவிக்க வேண்டும் என்று தென்காசி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தபால் வாக்குகளின் மறு எண்ணிக்கை இன்று தென்காசி கோட்டாட்சியர் அலுவகத்தில் நடைபெறுகிறது. இதற்காக அங்கு வாக்கு  எண்ணுவதற்கான கவுண்டிங் அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கையில் 18 வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் பங்கேற்கின்றனர். தபால் வாக்கு மறு எண்ணிக்கைக்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் 100 மீட்டர் சுற்றுப் பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் தென்காசி சட்டமன்றத் தொகுதியின் தபால் வாக்குகள் கோட்டாட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தாலுகா அலுவலகத்தில் பூட்டி சீல் வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. அந்த அறையின் சீல் அகற்றப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தபால் வாக்கு பெட்டி கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்ட பின்னர் தபால் வாக்கு மறு எண்ணிக்கை தொடங்கி நடைபெற உள்ளது.

தென்காசி சட்டமன்ற தொகுதியின் தபால் வாக்குகள் நீதிமன்ற உத்தரவுப்படி மீண்டும் எண்ணப்பட இருப்பதால் காங்கிரஸ் கட்சியினர் இடையே அதிர்ச்சியும், அதிமுக மத்தியில் மகிழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது.

தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கும் போது காங்கிரஸ் கட்சியின் பழனி நாடார் சட்டமன்ற உறுப்பினராக தொடருவாரா ? அல்லது அதிமுக வேட்பாளர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் தொகுதியை தட்டிப் பறிப்பாரா? என்பதற்கான தொகுதி மக்களின் எதிர்பார்ப்பு இன்று மாலை தெரிய வரும்.

ஏற்கனவே கடந்த 2016ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில்  அதிமுக சார்பில் போட்டியிட்ட செல்வமோகன் தாஸ் பாண்டியன் 86,339 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் பழனிநாடார் 85,877 வாக்குகளும் பெற்றனர்.
இதில் 462 வாக்குகள் அதிகம் பெற்று அதிமுக தென்காசி தொகுதியை கைப்பற்றி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:RTO அலுவலகங்கள் சனிக்கிழமைகளில் செயல்பட உத்தரவு!