3 வாரத்திற்கு ஜவுளி உற்பத்தியாளர்கள் போராட்டம் அறிவிப்பு!

3 வாரத்திற்கு ஜவுளி உற்பத்தியாளர்கள் போராட்டம் அறிவிப்பு!

திருப்பூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் மூன்று வாரத்திற்கு ஜவுளி உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

கோவை,திருப்பூர் மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் ஒருங்கிணைப்பு சங்கம் சார்பில் நாளை முதல் நவம்பர் 25 வரை 3 வார காலத்திற்கு ஜவுளி உற்பத்தி நிறுத்த போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். மற்ற மாநிலங்களில் புதிய ஜவுளி கொள்கை, மின்சார மானியம் போன்றவைகளால் ஜவுளி உற்பத்தி செலவு நமது மாநிலத்தை விட குறைவாக உள்ளதால் போட்டி போட இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் உற்பத்தியான ஜவுளிகள் 1000 கோடி ரூபாய் அளவிற்கு  தேக்கம் அடைந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பங்களாதேஷ் வியட்நாம் போன்ற நாடுகளில் இருந்து குறைந்த விலையில் ஜவுளிகள் இறக்குமதி, சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதாரம் மந்த நிலை காரணமாக ஜவுளி துணி ஏற்றுமதி குறைந்துள்ளது. இதன் காரணமாக பெருமளவில் ஜவுளி தேக்கம் அடைந்துள்ளது. மேலும் ஜவுளி உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் அரசின் கவனத்தை ஈர்க்கக்கூடிய வகையில், நாளை முதல் நவம்பர் 25 ஆம் தேதி வரை 3 வார காலத்திற்கு உற்பத்தி நிறுத்த போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர். மேலும் இந்த உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் திருப்பூர் கோவை மாவட்டத்தில் உள்ள விசைத்தறி தொழில் கூடங்கள், ஜவுளி தொழில் சார்ந்த ஆட்டோ லூம், சுல்ஜர் ஏர்ஜெட் பவர்லூம் உட்பட அனைத்து ஜவுளி தொழில்களின் உற்பத்தியை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

இந்த மூன்று வார கால உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் இரண்டு லட்சம் விசைத்தறி தொழிற் கூடங்கள் உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபடுவதால் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு உற்பத்தி பாதிப்பு ஏற்படும் நிலையுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் 5 லட்சம் விசைத்தறி தொழிலாளர்கள் வாழ்வாதாரம்  பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.