ஒரே மாதத்தில் தமிழ்நாட்டை தாக்கும் 3-வது தாழ்வுப்பகுதி... 25-ம் தேதி முதல் 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை...

தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் 25-ம் தேதி முதல் 2 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்யும் எனவும், சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

ஒரே மாதத்தில்  தமிழ்நாட்டை தாக்கும்  3-வது தாழ்வுப்பகுதி...  25-ம் தேதி முதல் 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை...

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 25 நாட்களில் 2 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நல்ல மழை பொழிவை கொடுத்துள்ளது. இதனால் ஏரி, குளங்கள் உள்பட அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வருகின்றன. கடந்த 10 நாட்களாக பெய்த கனமழையால், பல்வேறு மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று சில இடங்களில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த சூழ்நிலையில் தான், தமிழ்நாட்டை மூன்றாவது காற்றழுத்த தாழ்வு பகுதி தாக்க உள்ளது. தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகரத் தொடங்கி, இலங்கைக்கும், தென் தமிழகத்துக்கும் இடையே கரையை கடக்கக்கூடும் எனவும், வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதன் காரணமாக 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிக கனமழை பெய்யும் என்றும், குறிப்பாக டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும், வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.