கீழடியில் நடைபெற்று வந்த 9-ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் நிறைவு!!

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வந்த 9-ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் நேற்றுடன் நிறைவடைந்தது. 

கீழடியில் மத்திய தொல்லியல்துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் 3 கட்டமாகவும், பின்னர் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் 8 கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்றது. இதன் 9-ஆம்கட்ட அகழாய்வை கடந்த ஏப்ரல் 6-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைத்தார். 

இதில், வீரணன் என்பவரின் ஒன்றரை ஏக்கர் நிலத்தில் நடைபெற்ற அகழாய்வில், படிக எடைக்கல், விலங்கு உருவ பொம்மை, தங்க ஊசி என 600-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டன.  

கொந்தகை பகுதியில் ஏற்கனவே அகழாய்வு நடைபெற்ற இடம் அருகே தோண்டப்பட்ட 3 குழிகளில், 26 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன. இதில் 14 தாழிகள் திறக்கப்பட்டு அதில் இருந்து, எலும்புகள், சுடுமண் கிண்ணம், குடுவை, சுடுமண் பானைகள் உள்ளிட்ட பொருட்கள் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.  கொந்தகையில் இதுவரை 158 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன.

வழக்கமாக ஜனவரியில் தொடங்க வேண்டிய அகழாய்வு பணிகள், அருங்காட்சியக பணி காரணமாக ஏப்ரலில் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.