20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு... பொங்கல் பரிசு அறிவித்தார் முதலமைச்சர்...

தை பொங்கல் திருநாளை ஒட்டி, அரிசி  குடும்ப அட்டை தாரர்களுக்கு  20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு... பொங்கல் பரிசு அறிவித்தார் முதலமைச்சர்...

தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் திருநாளை, மக்கள் சிறப்பாக கொண்டாட, ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அந்தவகையில் 2022 தைப் பொங்கலை  சிறப்பாக கொண்டாட ஏதுவாக, அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மறுவாழ்வு முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு அரசு சார்பில் பொங்கல் பொருட்கள் தொகுப்பு வழங்கப்படவுள்ளது. 

முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் வெளியிடப்பட்ட அரசாணையில், மக்களுக்கு 20 பொருட்கள் கொண்ட தொகுப்பு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் பொங்கலுக்கு தேவையான பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெல் போன்ற பொருட்கள் இடம்பெறும் என கூறப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து அன்றைய தின சமையலுக்காக மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு ரவை, கோதுமை மாவு, உப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களும் வழங்கப்படவுள்ளது. இதற்கென ஆயிரத்து 88 கோடி ரூபாய் செலவிடப்படவுள்ளதாகவும், இதன் மூலம் 2 கோடியே 15 லட்சத்து 48 ஆயிரத்து 60 குடும்பங்கள் பயன்பெறும் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.