பேராசிரியர் அன்பழகனுக்கு சிலை; திறந்து வைத்த முதலமைச்சர்!

பேராசிரியர் அன்பழகனுக்கு சிலை; திறந்து வைத்த முதலமைச்சர்!

பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு வளாகத்தில் திமுக முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனின்  வெண்கல திருவுருவ சிலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள (DPI) பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேராசிரியர் அன்பழகனின் திருவுருவ சிலையை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் பேராசிரியரின் திருவுருவப்படத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.

பேராசிரியர் அன்பழகனை பொறுத்தவரையிலும், படிக்கின்ற காலத்திலேயே பெரியாரின் சமூக சீர்திருத்த கொள்கையிலும் அண்ணாவின் தமிழ் உணர்வு மிக்க பேச்சாற்றலிலும் ஈர்க்கப்பட்டு பொது வாழ்க்கையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். பள்ளி பருவத்திலேயே தமிழ் மொழியின் மீது தீவிர பற்று கொண்டவர். குறிப்பாக, 1944 முதல் 1957 ஆம் ஆண்டு வரையில் சென்னை ஐயப்பன் கல்லூரியில் துணை பேராசிரியராக பணியாற்றியுள்ளார். 

அதன் பிறகு திராவிட இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு 1962 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் 1967ஆம் ஆண்டு தொடங்கி 1971 ஆம் ஆண்டு வரையிலும் தொடர்ந்து ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளர். கருணாநிதி முதலமைச்சராக இருந்த காலத்தில் மக்கள் நல்வாழ்வு சமூக நலத்துறை நிதி மற்றும் கல்வித்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 7 ஆம் நாள் இயற்கை எய்தினார்.

இந்நிலையில், அவரை போற்றும் விதமாக கடந்த ஆண்டு தமிழக அரசு சார்பில் டிபிஐ வளாகம் பேராசிரியர் அன்பழகன் வளாகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் எட்டரை அடி உயரத்தில் 550 கிலோ எடை கொண்ட  அவரது சிலையினை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எவ வேலு, கே என் நேரு, உதயநிதி ஸ்டாலின்,  மா சுபிரமணியன், சேகர் பாபு, சுவாமிநாதன், சென்னை மாநகராட்சியின் மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், மற்றும் பேராசிரியர் அன்பழகனின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க:அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு; தாமாக முன்வந்து உயர்நீதி மன்றம் விசாரணை!