திமுகவினர் , மத்திய அரசின் திட்டங்களை புரிந்து கொண்டு தங்களை மாற்றிக் கொள்வார்கள் - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

இன்னும் மூன்று மாதத்தில் திமுகவினர் , மத்திய அரசின் திட்டங்களை புரிந்து கொண்டு தங்களை மாற்றிக்கொள்வார்கள் என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திமுகவினர் , மத்திய அரசின் திட்டங்களை புரிந்து கொண்டு தங்களை மாற்றிக் கொள்வார்கள்  - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை
Published on
Updated on
1 min read

கட்சி சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று காலை தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை புரிந்தார். அவருக்கு, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக சார்பில் செண்டை மேளத்துடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதைதொடர்ந்து, கட்சியின் மூத்த நிர்வாகிகளின் வீட்டிற்கு சென்று ஆசி பெற்ற அவர், தூத்துக்குடி 2- ம் கேட் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்

அதில் "தமிழகத்தில் பாஜக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. இளைஞர்கள் படை நம் பக்கம் திரும்பி இருக்கிறது. இதற்கு காரணம் அடிப்படியில் நம் கட்சிக்காக முன்னோர்கள், மூத்த நிர்வாகிகள் பிரதிபலன் பாராமல் உழைத்து தான் என கூறினார்.

அதனைதொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,  தமிழகத்தில் ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலைக்கான  அடிக்கல் நாட்டு விழாவுக்கு பிரதமர் மோடி வந்தபோது "கோ பேக்" மோடி என சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்த திமுகவினர், இன்று அதே திட்டம் தமிழகத்திற்கு கிடைத்த வரப்பிரசாதம் என குறிப்பிட்டு அந்த திட்டத்தின் மூலமாக 2000 கோடி ரூபாய் முதலீடு பெறப்பட்டிருப்பதாக தொழில்த்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், கொரோனா தடுப்பு பணிக்கு தமிழகத்திற்கு சரியான அளவில் தடுப்பூசி ஒதுக்காமல் மாற்றான் தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு நடந்து கொள்வதாக திமுகவினர் விமர்சித்தனர். ஆனால், தமிழகத்தின் சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் தேவைக்கு அதிகமாக தடுப்பூசியை தமிழகத்திற்கு ஒதுக்கி மத்திய அரசு வழங்கி வருவதாக தெரிவித்துள்ளார்.

எனவே, முன்னர் எதிர்கட்சியாக இருந்து விமர்சித்த திமுகவினர் மத்திய அரசை புரிந்து ஒன்றிணைந்து செயல்பட ஆரம்பித்துள்ளனர். இதுபோலவே, வேளாண் சட்டங்களையும், நீட் தேர்வு விஷயத்திலும் திமுகவினர் 3 மாதத்தில் தங்களை மாற்றிக்கொள்வார்கள் என நம்புகிறோம் என அவர் கூறினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com