தொழிற்சாலைகள் சட்டம்...! திமுகவின் வரலாற்றுப் பெருந்துரோகம் -சீமான்!!!

தொழிற்சாலைகள் சட்டம்...!  திமுகவின் வரலாற்றுப் பெருந்துரோகம் -சீமான்!!!

திமுக அரசு சட்டப்பேரவையில் கொண்டு வந்துள்ள தொழிற்சாலைகள் சட்டத்திருத்த வரைவு  தொழிலாளர்களுக்கு திமுக செய்துள்ள வரலாற்றுப் பெருந்துரோகம் என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் விமர்சித்துள்ளார்.

நேற்று நிறைவடைந்த நிதிநிலை அறிக்கை கூட்டதொடரில் இறுதியாக, தொழிலாளர்களின் வேலை நேரத்தை நீட்டிக்கும் விதமாக 'தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்த) சட்டம் -2023 சட்ட முன் வரைவு' தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ. கணேசனால் தாக்கல் செய்யப் பட்டுள்ளது. அப்போது திமுகவின் கூட்டணி கட்சிகளான விசிக, சிபிஐ, சிபிஎம், மதிமுக, மனித நேய மக்கள் கட்சி போன்றவை இச்சட்ட மசோதாவிற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்தன. கூட்டணி கட்சிகளின் எதிப்பையும் மீறி இம்மசோதா சட்டப் பேரவையில் நிறைவேறியது. இதனால் விசிக, சிபிஐ, சிபிஎம், மனித நேய மக்கள் கட்சி போன்றவை அவையில் இருந்து வெளிநடப்பு செய்தன.

இந்நிலையில் இச்சட்ட முன் வரைவுக்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''...இச்சட்ட வரைவினை திமுக அரசு விவாதமின்றி நிறைவேற்றியுள்ளது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. பன்னாட்டுப் பெருமுதலாளிகளின் இலாபத்தேவையை மட்டுமே கருத்திற்கொண்டு செய்யப்பட்டுள்ள இச்சட்டத்திருத்தங்களின் மூலம், தமிழ்நாட்டுத் தொழிலாளர்களின் உரிமைகளை அடகு வைக்க முயலும் திமுக அரசின் தொழிலாளர் விரோதப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது'' எனத் தெரிவித்துள்ளார்.

இப்புதிய சட்டத்திருத்த வரைவானது, தொழிலாளர்களின் வேலை நேரம், கூடுதல் வேலை நேரம், கூடுதல் வேலை நேரத்திற்கான ஊதியம், கூடுதல் வேலைக்கான விடுமுறை, ஓய்வு நேரம் போன்ற தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளைத் தீர்மானிக்கும் ‘தமிழ்நாடு தொழிற்சாலைகள் சட்டத்தின்’ பிரிவு 51 முதல் 59 வரையிலான விதிகளிலிருந்து ஒரு நிறுவனத்திற்கோ, குழுமத்திற்கோ அல்லது குறிப்பிட்ட தொழிற்பிரிவிற்கோ விலக்களிக்க தமிழ்நாடு அரசிற்கு அதிகாரமளிப்பதாக குறிப்பிட்டுள்ள அவர்  இதன்மூலம் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக மாற்றுவது உள்ளிட்ட தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதாக தெரிவித்துள்ளார்.

பாஜக-வைக் கடுமையாக எதிர்ப்பதாகக் கூறும் திமுக அரசும், மோடி அரசினை போலவே விவாதமின்றி அவசரகதியில் தற்போது ‘தொழிற்சாலைகள் விதிகளுக்கான வரைவுத் திருத்தங்களை நிறைவேற்றியுள்ளதாக குற்றம் சாட்டிய அவர் நூற்றாண்டுகாலமாகத் தொழிலாளர்கள் போராடிப்பெற்ற உரிமைகளை நொடிப்பொழுதில் நீர்த்துப்போகச் செய்யும் வரலாற்றுப் பெருந்துரோகமாகும் என சாடியுள்ளார்.

மேலும், திமுக அரசு இப்புதிய சட்டத்திருத்தம் கொண்டுவருவது குறித்து அனைத்து தொழிற்சங்கங்களையும் அழைத்துக் கருத்து கேட்காதது ஏன்? என கேள்வி எழுப்பிய அவர் 

இந்திய ஒன்றிய அரசு கொண்டு வந்த ‘தொழிலாளர் சட்டத் தொகுப்பை’  அடியொற்றி, அதே போன்றதொரு சட்டத்திருத்தத்தை திமுக அரசும் நிறைவேற்றி இருப்பதாக குற்றம் சாட்டியுள்ள சீமான் ''திமுகவின் திராவிட மாடல் என்பது பாஜகவின் தமிழ்நாட்டு மாடல்தான்''  எனக் கூறியுள்ளார்.