சிறைவாசிகள் விடுதலைக்கு எதிராக ஹிந்து கூட்டமைப்பு வழக்கு; விசாரணைக்கு ஏற்க மறுப்பு!

இஸ்லாமிய சிறைவாசிகளை அண்ணா பிறந்தநாளை ஒட்டி, முன்கூட்டி விடுதலை செய்ய எதிர்ப்பு தெரிவித்த வழக்கில், உரிய ஆவணங்களை இணைக்கவில்லை எனக் கூறி, விசாரணைக்கு ஏற்க மறுத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

தமிழ்நாடு ஹிந்து இயக்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜலேந்திரன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், கடந்த 1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி கோவையில் தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த அத்வானியை கொல்ல அல் உம்மா அமைப்பினர் 18 இடங்களில் தொடர் குண்டிவெடிப்புகளை நிகழ்த்தியதாகவும், இதில் 58 பேர் பலியானதாகவும், 150க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர் குண்டுவெடிப்பு வழக்கில், அல் உம்மா தலைவர் பாஷா உள்ளிட்டோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதாகவும்; சிலருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டதாகவும், தண்டனையை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கில் தண்டிக்கப்பட்ட 20 பேர் தற்போது  சிறையில் உள்ளதாகவும், அவர்களை அண்ணா பிறந்தநாளை ஒட்டி விடுதலை செய்ய முடிவெடுத்துள்ளதாகவும்,  நாடாளுமன்ற தேர்தலில் இஸ்லாமியர்களின் வாக்குகளை பெற இவர்களை விடுதலை செய்ய அரசு முடிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை விடுதலை செய்யக் கூடாது என அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு முன் விசாரணைக்கு வந்த போது, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, 49 கைதிகளை விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரைத்துள்ளதாகவும், அதன் மீது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனவும், கைதிகளை முன்கூட்டி விடுதலை செய்வது தொடர்பாக விதிகள் வகுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை தாக்கல் செய்தார்.

இதையடுத்து, குண்டுவெடிப்பு வழக்கின் தீர்ப்பு நகல் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாமல், முறையான ஆவண ஆதாரங்கள் இல்லாமல் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.

பயங்கரவாத தடுப்பு சட்டங்களில் தண்டிக்கப்பட்டவர்கள் விடுதலை பெற தகுதியில்லை என அரசாணையில் கூறப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், குற்ற வழக்கின் தீர்ப்பின்படி அவர்கள் விடுதலை பெற தகுதியில்லை என தெரிந்தால், அதை எதிர்த்து வழக்கு தொடரலாம் என மனுதாரருக்கு அனுமதியளித்தும் உத்தரவிட்டனர்.