தடையை மீறி பொது இடத்தில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு- அதிகாரிகள் பேச்சுவார்த்தை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் தடையை மீறி பொதுஇடத்தில் இந்து முன்னணி அமைப்பினர் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தடையை மீறி பொது இடத்தில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு- அதிகாரிகள் பேச்சுவார்த்தை

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. தமிழக அரசு கொரோனா பரவலை காரணம் காட்டி பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதி மறுத்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளிலேயே சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.

ஒசூர் பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் பிரம்மாண்டமான செட்டுகள் அமைத்து விநாயகர் சிலைகள் வழிபாடு நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு விநாயகர் பண்டிகை பொது இடங்களில் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால் இந்து அமைப்பினர் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்த நிலையில் தடையை மீறி இந்து முன்னணி அமைப்பைச் சார்ந்தவர்கள் ஓசூர் காந்தி சிலை அருகில் 2 அடி உயரமுள்ள விநாயகர் சிலையை பொது இடத்தில் வைத்து வழிபாடு நடத்தினர். அப்போது கோஷங்களை எழுப்பி பூஜைகள் செய்தனர். இது குறித்து அறிந்த வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஒரு கோயிலுக்குள் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்யுங்கள் பொது இடத்தில் வைக்க கூடாது நீதிமன்ற உத்தரவு தமிழக அரசின் உத்தரவு தொடர்ந்து இருக்கிறது என்று அதிகாரிகள் அறிவுரை வழங்கினர். ஆனாலும் இந்து அமைப்பினர் அவர்களுக்கு அசைந்து கொடுக்காமல் தொடர்ந்து நாங்கள் பொது இடத்திலே வழிபாடு நடத்துவோம் என கூறினர்.

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பொது இடங்களில் வழிபாடு நடத்தப்படுகிறது அதுபோல எங்களுக்கு ஓசூரில் பொது இடத்தில் வழிபாடு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என அமைப்பினர் கூறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அங்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சிறிது நேர வாக்குவாதம் நடத்திய பின்னர் சிலையை எடுத்து சென்று நீர்நிலையில் கறைத்தனர்