ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

அரியலூர், கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, நிலவளத்தையும், நீர்வளத்தையும் நாசப்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடச் செய்ய வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதவது :

ஹைட்ரோ கார்பன் எனும் எரிகாற்று எடுக்கும் திட்டத்திற்கெதிராக ஒட்டுமொத்த தமிழகமும் எதிர்ப்பைத் தெரிவித்து, அதனை ஆளும் அரசும் ஏற்று அத்திட்டத்தைக் கைவிடுவதற்குக் கொள்கை முடிவு எடுத்திருக்கும் நிலையில், அதனை அலட்சியப்படுத்தி மாநில அரசைத் துளியும் மதியாது மத்தியில் ஆளும் பாஜக அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த முனைவது அதிர்ச்சியளிக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாகத் தொடங்கவுள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிடக்கோரி பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ள நிலையில், அரியலூர் மாவட்டத்தில் 10 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு மத்திய அரசின் ஒ.என்.ஜி.சி. நிறுவனம் அனுமதிகேட்டு மாநில சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் விண்ணப்பித்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. மாநில அரசின் தன்னுரிமைக்கும், மக்களின் மண்ணுரிமைக்கும் மதிப்பளிக்காது எதேச்சதிகாரப்போக்கோடு தமிழகத்தின் மீது நிலவியல் போரைத் தொடுக்க முயலும் மத்தியில் ஆளும் பாஜக அரசின் செயல் மக்களாட்சித் தத்துவத்திற்கெதிரான மாபாதகமாகும்.

வேளாண் பெருங்குடி மக்களின் நெடுநாள் கோரிக்கை முழக்கத்தை ஏற்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, கரூர், அரியலூர், கடலூர் புதுக்கோட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்களை உள்ளடக்கிய காவிரி சமவெளிப் பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அன்றைய அதிமுக அரசு அறிவித்ததையடுத்து, மீத்தேன், ஹைட்ரோ கார்பன், கெயில் எரிவாயு உள்ளிட்ட திட்டங்களால் அச்சமடைந்திருந்த விவசாயப் பெருங்குடி மக்கள் நிம்மதியடைந்தனர்.

ஆனால், அதிமுக அரசால் சட்டமன்றத்தில் சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டபோது முந்தைய அறிவிப்புக்கு மாறாக திருச்சி, கரூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் விடுபட்டிருந்தது பெருத்த ஏமாற்றத்தைத் தந்தது. மேலும், அந்தச் சட்டத்தின் 4(2)(a) பிரிவானது, அச்சட்டம் செயற்பாட்டுக்கு வரும்முன் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் தொடங்கப்பட்ட திட்டங்கள் எதுவும் நிறுத்தப்படாது என்று கூறப்பட்டிருந்தது விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதைச் சுட்டிக் காட்டி அரசின் முடிவை எதிர்த்து அப்போதே நாம் தமிழர் கட்சி குரல் கொடுத்தது. தற்போது காவிரி சமவெளிப்பகுதியில் மீண்டும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு முனைப்பு காட்டுவது விவசாயிகளைப் பெருங்கவலையில் ஆழ்த்தியுள்ளது.

தமிழகம் மற்றும் புதுவையில் 1984-ம் ஆண்டிலிருந்து ஒ.என்.ஜி.சி நிறுவனம் இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய்க்கிணறுகளை அமைத்து வருகிறது. 1984-ம் ஆண்டிலிருந்து, தற்போதுவரை மொத்தமாக 768 கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 187 கிணறுகள் (திருவாரூரில் 78, நாகையில் 57, தஞ்சையில் 12, கடலூரில் 4, அரியலூரில் 1, இராமநாதபுரத்தில் 35) என மொத்தமாக 187 கிணறுகள் தற்போது செயல்பாட்டில் உள்ளன. 2019-ம் ஆண்டில் மட்டும் தமிழகம், புதுவையில் வேதாந்த நிறுவனம் 274 கிணறுகளும், ஓ.என்.ஜி.சி 215 கிணறுகளும் என மொத்தமாக 489 எண்ணெய் கிணறுகள் அமைப்பதற்காக ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன.