உச்சநீதிமன்றத்தில் கொடுத்த தீர்ப்பு தவறா...? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி..?

நீட் தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணான நிலைப்பட்டை எடுக்க முடியாது என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறித்தி உள்ளது.
உச்சநீதிமன்றத்தில் கொடுத்த தீர்ப்பு தவறா...? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி..?
Published on
Updated on
1 min read
தமிழகத்தில் நீட் தேர்வு ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், ஒன்பது பேர் அடங்கிய குழுவை நியமித்து தமிழக அரசு,  ஜூன் 10ம் தேதி அரசாணை பிறப்பித்துள்ளது. நீட் தேர்வு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றால், மாற்று வழி குறித்தும், அதை அமல்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஒரு மாதத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அரசாணைக்கு தடை விதிக்க கோரியும், அதை ரத்து செய்யக் கோரியும், தமிழக பா.ஜ. பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில்,  நாடாளுமன்றம் நிறைவேற்றும் சட்டம், நாடு முழுவதற்கும் பொதுவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ கல்வியின் தரத்தை மேம்படுத்த 2019ம் ஆண்டு தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியது எனவும், அந்த சட்டத்தின் அடிப்படையில், மருத்துவ ஆலோசனை குழுமம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. மருத்துவ கல்வியை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளை மருத்துவ ஆணையத்திடமும், ஆலோசனை குழுமத்திடமும் மட்டுமே தெரிவிக்க வேண்டும் எனவும், அதை மீறும் வகையில் தற்போது தமிழக அரசு குழு அமைத்துள்ளதாகவும், இது அனுமதிக்கத்தக்கதல்ல என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம் நிறைவேற்றிய சட்டத்துக்கு முரணாக மாநில அரசு செயல்பட முடியாது எனவும், உச்ச நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையிலும், தேசிய நலனின் அடிப்படையிலும், நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.  மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் மாநில அரசு, இந்த விவகாரத்தை அரசியலாக்க கூடாது எனவும், ஏழை மாணவர்கள் மருத்துவ படிப்பு படிக்க ஏதுவாக அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த  வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி ஆஜராகி, நீட் தேர்வு நடைமுறையை புறந்தள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு குழு அமைத்திருப்பதாக குற்றம்சாட்டினார். தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி தேர்தல் அறிக்கையில் உத்தரவாதம் அளிக்கப்பட்டதன் அடிப்படையில், கொள்கை முடிவு எடுக்கப்பட்டு குழு அமைக்கப்பட்டதாக தெரிவித்தார்.
ஆனால் நீதிபதிகள் குறுக்கிட்டு, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணான நிலைபாட்டை எடுக்க முடியாது என அரசுக்கு அறிவுறுத்தினர். மேலும், குழு அமைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டதா எனவும் கேள்வி எழுப்பினர். அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க அவகாசம் வேண்டுமென அரசு தலைமை வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார். 
இதையடுத்து, வழக்கு குறித்து ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஜூலை 5க்கு தள்ளிவைத்தனர்.
logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com