தனியார் பள்ளிகள் சட்டம்...! தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும்...!! சென்னை உயர் நீதிமன்றம்...!!

தனியார் பள்ளிகள் சட்டம்...! தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும்...!! சென்னை உயர் நீதிமன்றம்...!!

தனியார் பள்ளிகள் முறைப்படுத்தல் சட்டம் மற்றும் விதிகளை அமல்படுத்தும் விஷயத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் தனியார் பள்ளிகளை முறைப்படுத்துவது தொடர்பாக 2018ம் ஆண்டு 'தமிழ்நாடு தனியார் பள்ளிகள் முறைப்படுத்தல் சட்டம்' இயற்றப்பட்டு, அரசிதழில் வெளியிடப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் கடந்த ஜனவரி மாதம் விதிகள் வகுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டன.

"சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் பள்ளிகள் துவங்க அரசு அனுமதி பெற வேண்டும், சிறுபான்மை அந்தஸ்து கோரி விண்ணப்பிக்க வேண்டும்"  உள்ளிட்ட இந்த விதிகள், அரசியல் சாசனம் வழங்கியுள்ள சிறுபான்மையினருக்கு உரிமைகளை பறிக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறி,  பல்வேறு திருச்சபைகளின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இந்த வழக்குகள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர் மற்றும் பாலாஜி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தன.அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர்கள், ஏற்கனவே கடந்த 1973ம் ஆண்டு  அப்போதைய அரசால் கொண்டு வரப்பட்டு, உயர் நீதிமன்றத்தால் 1975ல் ரத்து செய்யப்பட்ட பல பிரிவுகள் தற்போது கொண்டு வரப்பட்டுள்ள புதிய சட்டத்தின் மூலமும், விதிகளின் மூலமும் மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளதாக வாதிடப்பட்டது.

மேலும், 1975ம் ஆண்டு உயர்நீதி மன்றம் வழங்கிய உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்துக்கே மாற்றியதாகவும், அப்போது புதிய சட்டம் கொண்டு வரப்பட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்று, 1973ம் ஆண்டு சட்டம் அமல்படுத்துவதில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என 2012ல் உயர் நீதிமன்றத்தால் உத்தரவிடப் பட்டதாகவும் வாதிடப்பட்டது.

இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க ஆட்சேபம் தெரிவித்து தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞர், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளின் அடிப்படையில் புதிய விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், அந்த விதிகள் சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமல்லாமல், சிறுபான்மையல்லாத கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அடுத்த கல்வியாண்டு துவங்க உள்ளதையும், 1973ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்தை அமல்படுத்தும் விவகாரத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளதையும், மாணவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் நலனையும் சுட்டிக்காட்டி புதிய சட்டம் மற்றும் விதிகளை அமல்படுத்துவதில் ஜூன் 15ம் தேதி வரை தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்குகளின் விசாரணையை ஜூன் 5ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.