தேசிய புலிகள் ஆணைய குழுவினர் நாளை உதகை வருகை!

நீலகிரி மாவட்டத்தில் 10 புலிகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தேசிய புலிகள் ஆணைய குழுவினர் நேரில் விசாரணை நடத்த உதகைக்கு நாளை செல்கின்றனர். 

இயற்கை எழில் கொஞ்சம் நீலகிரி மாவட்டம் சுமார் 60% வனப்பகுதியை கொண்ட மாவட்டமாகும். இந்த வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி, மான், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகளின் புகலிடமாக திகழ்ந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது நீலகிரி மாவட்டத்தில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், புலிகளின் மர்மமான இறப்புகள் வன ஆர்வலர்களிடையேயும், வனத்துறை அதிகாரிகளிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் எமரால்டு, நடுவட்டம், கார்குடி, சிறியூர், சின்ன குன்னூர் ஆகிய பகுதிகளில் ஆறு புலி குட்டிகள் உட்பட 10 புலிகள் கடந்த 40 நாட்களில் மர்மமான முறையில் உயிரிழந்தது. இதுகுறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில் நடுவட்டம் பகுதியில் இறந்த புலி வயது மூப்பு காரணமாக  இறந்ததாகவும், எமரால்டு அவலாஞ்சி நீர் பிடிப்பு பகுதியில் இறந்த இரண்டு புலிகள் விஷம் வைத்து கொல்லப்பட்டதாகவும் தெரியவந்துள்ளதாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சீகூர் வனச்சரக்கத்திற்குட்பட்ட சிறியூர் மற்றும் உதகை அருகே உள்ள சின்ன குன்னூர் பகுதியில் ஆறு புலி குட்டிகள் தாய்ப்பால் இன்றி இறந்தது தெரியவந்துள்ளது. இதன் இரண்டு தாய் புலிகள் குறித்த எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.

இந்நிலையில் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் ஆறு புலி குட்டிகள் இறந்த பகுதி மற்றும் எமரால்டு, நடுவட்டம், கார்குடி ஆகிய வனப்பகுதிகளில் தேசிய புலிகள் ஆணைய குழுவினர் நேரில் விசாரிக்க நாளை வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதையும் படிக்க: கடலூரில் முதல் முறையாக ’நம்ம ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சி...குஷியில் பொதுமக்கள்!