ஒடிசா ரயில் விபத்து: "தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கிறது" திருமாவளவன் சாடல்!

ஒடிசா ரயில் விபத்து: "தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கிறது" திருமாவளவன் சாடல்!

தொழில்நுட்பம் வளர்ந்த காலத்திலும் ஒடிசா ரயில் விபத்து நிகழ்ந்தது தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கிறது என திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்பியுமான தொல். திருமாவளவன்  பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று சிதம்பரம் வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது, அண்மையில் ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து, இந்திய தேசத்தை மட்டும் அல்ல உலகத்தையே உலுக்கி இருக்கிறது. இதுவரை 275 பேர் பலியாகி உள்ளனர். இந்த விபத்துக்கு ரயில்வே துறையின், ஒன்றிய அரசின் அலட்சியமான போக்குதான் காரணம் என அந்த துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்து கூறியிருக்கின்றனர். 

தென்கிழக்கு ரயில்வே மண்டல பொது மேலாளர் அங்குள்ள பிரச்சனைகள் குறித்து ஏற்கெனவே ரயில்வே அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியதாக சொல்கிறார். அகில இந்திய தணிக்கையாளர் அளித்த அறிக்கையில் நடவடிக்கை குறித்து குறிப்பிட்டிருக்கிறார். அது ஆட்சியாளர்களாலும், அமைச்சகத்தாலும் அலட்சியப்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த அறிக்கையின் அடிப்படையில் அமைச்சகம் நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த ரயில் விபத்து நிகழ்ந்து இருக்காது. இதற்கு பிரதமர் மோடி பொறுப்பேற்க வேண்டும் ரயில்வே அமைச்சர் பதவி விலகி முழுமையான விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.

மேலும், அதிநவீன தொழில்நுட்பம் வளர்ந்திருக்கின்ற இந்த கால கட்டத்தில், தற்போது ஏற்பட்டுள்ள விபத்து உலக அரங்கில் நமக்கு தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கிறது. மம்தா பானர்ஜி ரயில்வே துறை அமைச்சராக இருந்த காலத்தில் விபத்தை தவிர்க்க பாதுகாப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதுதான் இந்த ஆட்சி காலத்தில் 'கவாச்' என்ற பெயரில் அழைக்கிறார்கள். ஆனால் அந்த திட்டத்தை கூட இவர்கள் நடைமுறைப்படுத்தவில்லை. ரயில்வே பாதுகாப்புக்காக ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை என்பது தெரிகிறது என்று குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து, இந்து ராஷ்டிரம் அமைப்போம் என்பவர்களுக்கும், இஸ்லாமியர்களையும், கிறிஸ்தவர்களையும் வெளிப்படையாக அச்சுறுத்துபவர்களுக்கும் அமைச்சர் பதவி தருகிறார் மோடி. மத வெறியர்களுக்கும், சாதி வெறியர்களுக்கும் அளிக்கின்ற முக்கியத்துவம். வெறுப்பு அரசியலுக்கு தருகின்ற முக்கியத்துவம் நாட்டு மக்களின் பாதுகாப்புக்கு அளிப்பதில்லை என்பது இதுபோன்ற சம்பவங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இந்த விபத்து குறித்து முழுமையான வெள்ளை அறிக்கையை பிரதமர் வெளியிட வேண்டும். சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து தண்டிப்பதற்காக சிறப்பு புலனாய்வு விசாரணை ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிக்க:கீழ்பவானி வாய்க்காலை மண்ணால் சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை!