
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த நிலையில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக, புதிதாக உருவாக்கப்பட்ட மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில், வார்டு எண்ணிக்கையை இறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், இடஒதுக்கீடு அடிப்படையில் வார்டுகள் வரையறை செய்யப்பட்டு, வார்டு வாரியாக வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் துரிதமாக மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த சூழலில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை பிப்ரவரி மாதத்தில் நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பாணையை ஜனவரி 3வது வாரத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாக, ஜனவரி மாதம் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற உள்ள நிலையில், சட்டப்பேரவை நிறைவு மற்றும் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கிய பின் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு வெளியாக அதிகளவில் வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. உள்ளாட்சி தேர்தலை 2 கட்டங்களாக நடத்தவும், பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைப்பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.