தடையை மீறி  சுரங்கப்பாதையில் சென்ற பேருந்து...  வெள்ளத்தில் பேருந்து சிக்கியதால் பயணிகள் அவதி...

சென்னை போரூரிலிருந்து மந்தைவெளி நோக்கி வந்த மாநகர பேருந்து தடுப்பையும் மீறி சுரங்கப்பாதைக்குள் நுழைந்ததால், தேங்கிய மழைநீரில் சிக்கியது.

தடையை மீறி  சுரங்கப்பாதையில் சென்ற பேருந்து...  வெள்ளத்தில் பேருந்து சிக்கியதால் பயணிகள் அவதி...

வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்ததன் காரணமாக கடந்த சில தினங்களாக கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகள், சுரங்கப்பாதைகள், தரைபாலங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் அப்பகுதிகளில் பேரிகாடு உள்ளிட்ட தடுப்புகள் அமைத்து மக்கள் அந்த பாதையை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது வெள்ளம் படிப்படியாக வடிந்து வருகிறது. 

இந்தநிலையில் இன்று காலை போரூரிலிருந்து தியாகராய நகர் வழியாக மந்தைவெளி நோக்கி மாநகர பேருந்து சென்றுள்ளது. பேருந்து தி. நகர் அருகே உள்ள தியாகி அரங்கநாதன் சுரங்கப்பாதையில், சென்றபோது, பக்கவாட்டு கண்ணாடிகள் வழியாக பேருந்துக்குள் மழைவெள்ளம் புகுந்துள்ளது.

பேரிகாடு தடுப்பை கவனிக்காமல் ஓட்டுனர் பேருந்தை ஓட்டியதால், பேருந்தும் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டது. விரைந்து வந்த தீயணைப்பு படையினர் பேருந்தில் இருந்த பயணிகள், ஓட்டுனர், நடத்துனர் ஆகியோரை மீட்டு கரை சேர்த்தனர்.  இதைத்தொடர்ந்து பேருந்தை மீட்கும் பணி நடைபெற்றது.