பார்க்கிங்கில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்... ரயில் நிலையத்தில் பரபரப்பு...

சென்னையில் ரயில் நிலைய பார்க்கிங் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென தீபற்றி எரிந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பார்க்கிங்கில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்... ரயில் நிலையத்தில் பரபரப்பு...

சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்தவர் துரைகுமார் (37). இவர் ஊருக்குச் செல்வதற்காக தனது காரை கடந்த 11 ஆம் தேதி திருவல்லிக்கேணி புறநகர் ரயில் நிலைய பார்க்கிங் பகுதியில் நிறுத்திவிட்டு ரயிலில் பயணித்து சென்ட்ரல் சென்று சொந்த ஊருக்கு ரயில் மூலமாகச் சென்றுள்ளார்.

பின்னர் நேற்று சென்னை திரும்பிய அவர் மாலை 5 மணியளவில் திருவல்லிக்கேணி ரயில் நிலைய பார்க்கிங் -ல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது காரை எடுக்க முயன்றார். அப்போது காரில் இருந்து கரும்புகை கிளம்பி திடீரென கார் தீப்பற்றி எரியத் துவங்கியது.

தீ மளமளவென பரவி காரின் முன் பகுதி முழுவதும் சேதமடைந்ததுடன் அருகில் இருந்த காரிலும் தீ பரவத் துவங்கியது. இதற்கிடையில் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மயிலாப்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் விரைந்து செயல்பட்டு சுமார் 6 மணிக்குள் தீயை அணைத்தனர்.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக கார் உரிமையாளர் துரை குமார் மெரினா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் மெரினா காவல்துறையினர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் தீ பிடித்தது எப்படி? என்ற கோணத்தில் சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.