சமாதானம் திட்டம் - முதலமைச்சர் அறிமுகம்!

சமாதானம் திட்டம் மூலம் 50 ஆயிரம் ரூபாய்க்குக் கீழ் வரி நிலுவை வைத்துள்ள வணிகர்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை சார்பில் செயல்படுத்தப்பட உள்ள சமாதானம் திட்டம் குறித்து விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிமுகம் செய்தார். நீண்ட காலமாக வரி செலுத்தாமல் நிலுவையில் வைத்திருக்கும் வரி பாக்கிகளை தீர்க்கும் வகையில் சமாதானம் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய முதலமைச்சர், தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 529 நிறுவனங்கள் உள்ளதாகவும், அரசிற்கு செலுத்தப்பட வேண்டிய வரி, வட்டி உள்ளிட்டவை இன்னும் பல வணிகர்கள் பெயரில் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.  

சமாதானம் திட்டம் மூலம் 50 ஆயிரம் ரூபாய்க்குக் கீழ் வரி நிலுவை வைத்துள்ள 95 ஆயிரத்து 502 வணிகர்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று முதலமைச்சர் கூறினார். தமிழ்நாட்டு வரலாற்றின் சிறு வணிகர்களுக்கு இவ்வாறு வரி தள்ளுபடி செய்வது இது தான் முதல் முறை என்று அவர் பெருமிதம் தெரிவித்தார்.  

50,000 முதல் 10 லட்சம் வரை, 10 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை,  ஒரு கோடி முதல் 10 கோடி ரூபாய் வரை, 10 கோடிக்கு மேலாக என 4 வகைகளில் நிலுவையில் பிரிக்கப்பட்டு 20 சதவிதத்தை செலுத்தி பயன் பெறலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், இந்தத் திட்டம் அக்டோபர் 16-ம் தேதி முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 15 வரை நடைமுறையில் இருக்கும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.