2,670 வேட்பாளர்கள்... இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது சென்னை மாநகராட்சி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியில் மொத்தம் 2 ஆயிரத்து 670 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

2,670 வேட்பாளர்கள்... இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது சென்னை மாநகராட்சி

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 12 ஆயிரத்து 838 வார்டுகளின் கவுன்சிலர் பதவிகளுக்கு, வரும் 19ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இத்தேர்தலுக்கான மனுத்தாக்கல் ஜனவரி 28ம் தேதி துவங்கி 4ம் தேதி முடிவடைந்தது. மனுக்களை திரும்ப பெற நேற்று இறுதி நாள் என்பதால் இதைத் தொடர்ந்து இறுதி வேட்பாளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது.  

அதன்படி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதில் சென்னை மாநகராட்சியில் மொத்தம் 3 ஆயிரத்து 546 வேட்புமனுக்கள் பேறப்பட்டதாகவும், இதில் 243 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 633 வேட்புமனுக்கள் வேட்பாளர்களால் திரும்பப்பெறப்பட்டு, இறுதியாக 2 ஆயிரத்து 670 வேட்பாளர்கள் களம் காண உள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.