"பண்டிகை காலங்களில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணமே சரியான கட்டணம் .." - தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம்

"பண்டிகை காலங்களில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணமே சரியான கட்டணம் .." - தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம்

ஆம்னி பேருந்து கட்டணத்தை நிர்ணயிக்க அரசுக்கு அதிகாரம் இல்லை, பண்டிகை காலங்களில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணமே சரியான கட்டணம் என தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. 

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பாக செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது, பண்டிகை காலங்களில் அதிகப்படியான கட்டணம் வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து  புகார்கள் எழுந்துள்ள நிலையில், அதற்கு விளக்கம் அளிப்பதற்காக இந்த சந்திப்பு நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க தலைவர் அப்சல் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக ஆம்னி பேருந்து துறை மீண்டு வர முடியாத நிலையில் உள்ளதாகவும், 2500 பேருந்துகளுக்கு மேல் இயங்கி வந்த இந்த துறையில் தற்போது 1500 பேருந்துகள் மட்டுமே இயங்கி வருவதாக வேதனை தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், பெட்ரோல் விலை உயர்வு, சாலை வரி,  ஜிஎஸ்டி மற்றும் சுங்கவரி கட்டணத்தால் மாதத்திற்கு ஒன்றரை லட்சம் அரசுக்கு கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. கடந்த 2016 ஆண்டு டோபோ என்ற  இணையதளம் மூலம் நிர்ணயம் செய்யப்பட்ட விலை தான் தற்போது வரை வசூலிக்கப்பட்டு வருவதாகவும், இந்த TOBO எனப்படும் இணையதளம், அனைத்து சங்கங்களும் சேர்ந்து முடிவெடுத்து நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் எனக்  கூறினார்.

அதனால் தாங்கள் அதிகப்படியான கட்டணம் வசூலிப்பது என்பது தவறான தகவல். ஒரு சில நிறுவனங்கள் இதுபோன்று கட்டணங்களை உயர்வாக வசூலித்து இருந்தால் அதனை கண்காணித்து சரி செய்ய உள்ளோம் என்றும்  கூறினார். மேலும், சாதாரண அம்னி பேருந்து கிலோ மீட்டருக்கு ரூ.1.60 க்கும், ஏசி பேருந்துகளுக்கு ரூ. 1,75 க்கும், ஏசி ஸ்லீப்பர் பேருந்துகளுக்கு ரூ. 2.00 க்கும், பேருந்துகளுக்கு ஏற்றவாறு கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் இன்றைக்கு ஆன்லைன் வர்த்தகத்தின் மூலமாக 98 விழுக்காடு கமிஷன் தொகை அவர்களுக்கு சேர்வதால் தங்களுக்கு லாபகரமாக இல்லை எனவும் கூறினார். ஆம்னி பேருந்து கட்டணத்தை நிர்ணயிக்க அரசுக்கு எந்த அதிகாரமும் கிடையாது, உச்ச நீதிமன்றம் வரை இந்த வழக்கு சென்றுள்ளது என்று கூறிய அவர், ஆம்னி பேருந்துகளில் கூடுதல் பணம் வசூல் செய்தால் பேருந்துகள் அருகில் நின்று பணத்தை திருப்பி நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.

ஒரு வருடத்தில் 40 நாட்கள் மட்டும் தான் தொழில் நடக்கிறது எனக் கூறிய அவர், வருடத்திற்கு 365 அரசுக்கும் வரியை செலுத்தி வருவதாகவும், அரசு விலையை நிர்ணயம் செய்ய முடியாது என்றும் பப்ளிக் சர்வீஸ் ஆன அரசு பேருந்துகள் தொடர்ந்து நஷ்டத்தில் உள்ளதாகவும் கூறினார். மேலும் பேசிய அவர், மக்களுக்கு இந்த கட்டணம் ஏற்புடையது என்று அறிந்து விருப்பப்பட்ட மக்களை மட்டுமே தான் எங்கள் பேருந்துகளில் வர சொல்வதாகவும் கூறிய அவர், ஆம்னி பேருந்தை கட்டுப்படுத்த அரசால் முடியாது நீங்கள் பேருந்தை இயக்க கூடாது என்று அவர்களால் சொல்ல முடியாது என்றும் கூறினார்.

பண்டிகை காலத்தில் வசூல் செய்யப்படும் கட்டணமே ஆம்னி பேருந்துகளின் சரியான மற்றும் நிரந்தரமான கட்டணம் என்று தெரிவித்த அவர் மற்ற காலங்களில் மிக குறைவான கட்டணம் தான் வசூல் செய்ப்படுகிறது என்றும் கடந்த 2 வருடமாக 2500 பேருந்துகள் வெளியே வர முடியாமல் உள்ளது வங்கி கூட அந்த பேருந்துகளை வாங்கி கொண்டு செல்வதில்லை என்றும் தெரிவித்தார். சோதனை செய்தேன் என்ற பெயருக்கு அரசு அதிகாரிகள் சோதனை செய்கிறார்கள் என்று கூறிய அவர் தங்கள் தலைமுறை யாரும் இந்த தொழிலுக்கு வர வில்லை என்றும் கடந்த 2 வருடமாக கொரோனாவால் 10 ஆயிரம் கோடி ஆம்னி பேருந்து கழகத்திற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், டீசல் விலையை ரூ.40 ஆக்க வேண்டும் என்றும் ஜி.எஸ்.டி மற்றும் சாலை வரி, இன்சூரன்ஸ் ஆகியவற்றை குறைத்தால் பேருந்து கட்டணம் குறையும் என்று கூறினார்.