கண் இமைக்காமல் இருந்து சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த சிறுமி..!

Published on
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் சிறுமி ஒருவா் இரண்டு மணி நேரம் தொடர்ச்சியாக கண் இமைகளை மூடாமல் யோகா செய்து உலக சாதனை படைத்துள்ளார். 

உலக பார்வை தினம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ராஜபாளையத்தில் 10 வயது மாணவி 2 மணி நேரம் தொடர்ச்சியாக கண் இமைகளை மூடாமல் அமர்ந்து உலக சாதனை முயற்சி மேற்கொண்டார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு பயிலும் 10 வயது மாணவி அனிஷ்கா, யோகா பயிற்சியாளர் அய்யப்பனிடம் பயிற்சி பெற்று வருகிறார். அவரது பயிற்சியின் படி பல மணி நேரம் வரை கண்களை இமைக்காமல் இருப்பதற்காக கடந்த 3 மாதங்களாக முயன்று வருகிறார்.

இன்று உலக பார்வை தினம் கடைபிடிக்கப்படுகிறது. பிறவியிலேயே கண் பார்வை இல்லாதவர்கள், உணவு குறைபாடு, கண்புரை, கண் அழுத்தம், பூ விழுதல் மற்றும் விபத்து காரணமாக பார்வை இழப்பவர்கள் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

கண் தானம் மூலம் கண் பார்வை இழப்பை தடுப்பது, அதிகமாக செல்போன், டிவி, கணிணி பார்ப்பது, இரவில் அதிக நேரம் விழித்திருப்பதால் ஏற்படும் கண் குறைபாடு பிரச்சனையை சரி செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே கண் பார்வை தினத்தின் நோக்கமாக உள்ளது.

இந்த தினத்தின் நோக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பயிற்சியாளர் அய்யப்பன் ஏற்பாட்டின் படி இன்று இரண்டு மணி நேரம் வரை கண்ணிமைக்காமல் சிறுமி அனிஷ்கா உலக சாதனை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.  ‘ஏசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ நிறுவனம் இந்த சாதனையை நிகழ்த்த அனுமதி வழங்கியது.

இதனையடுத்து, பழையபாளையம் பகுதியில் உள்ள சமுதாய கூடத்தில் இந்த சாதனை நிகழ்வு நடைபெற்றது. சிறுமி அனிஷ்கா நாற்காலியில் அமர்ந்தவாறு தொடர்ந்து இரண்டு மணி நேரம் வரை கண் இமைகளை மூடாமல் சாதனை நிகழ்த்தினார். சிறிது நேரத்திலேயே கண்களில் எரிச்சல் ஏற்பட்டு கண்ணீர் வழிந்த போதும், விடா முயற்சியுடன் இந்த சாதனையை நிகழ்த்தினார்.

2 மணி நேரம் வரை இமைக்காமல் அமர்ந்திருந்து வெற்றிகரமாக சாதனையை நிறைவு செய்த சிறுமிக்கு அவரது தாயும் நகராட்சி திமுக சேர்மனுமான பவித்ரா ஷ்யாம் மற்றும் உறவினர்கள் பாராட்டு தெரிவித்தனர். ஆசிரியை ஒருவர் அவருக்கு பாராட்டு கவிதை வாசித்தார்.

இந்த சாதனை நிகழ்வு முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்பட்டு, சாதனை நிறுவனத்திற்க அனுப்பி வைக்கப்படும். வீடியோவை அந்த நிறுவனம் முழுமையாக ஆய்வு செய்த பின்னர், சில வாரங்களில் சாதனை செய்ததற்கான சான்றிதழ் மற்றும் பதக்கம் அனுப்பி வைக்கப்படும் என ஏற்பாட்டாளர் அய்யப்பன் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com