
தமிழக முதலமைச்சர் திருச்சியிலிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவிகள் வழங்கும் விழாவை காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார்.
மேலும் படிக்க |
இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் விழாவில் முதலமைச்சரின் உரையை காணொளி வாயிலாக பொதுமக்களுக்கு காண்பிப்பதற்கு விழா அரங்கத்தில் பெரிய திரைகளை திருப்பத்தூர் அடுத்த பொம்மிங்குப்பம் பகுதியைச் சேர்ந்த சந்திரகுமார் என்பவர் மூலம் ஏற்பாடு செய்திருந்தனர்.
முதலமைச்சரின் உரை முடிந்ததும் சுய உதவிக் குழு பெண்களுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கியது. அப்போது அந்த பெரிய திரைகளின் மின் இணைப்புகளை சந்திரகுமார் அழைத்து வந்திருந்த 11 வயதுடைய பவன்குமார் 12 வயதுடைய மவுலீஸ்வரன் ஆகிய சிறுவர்கள் துண்டித்துக் கொண்டிருந்தனர்.
குழந்தை தொழிலாளர்கள் சட்டத்தின் படி 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்களை பணியில் அமர்த்தக் கூடாது என்கிற விதி இருந்தும் அதை சற்றும் பின்பற்றாமல் மாவட்ட ஆட்சித் தலைவர் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் முக்கிய பிரமுகர்கள் வந்திருந்த விழா மேடைக்கு அருகாமையிலேயே அரங்கேறிய அவலத்தினால் பொதுமக்கள் முகம் சுளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.