நாடு அரசியலமைப்பு படி செயல்படவில்லை...மாறாக...சீமான் பேச்சு!

நாடு அரசியலமைப்பு படி செயல்படவில்லை...மாறாக...சீமான் பேச்சு!

நாடு அரசியலமைப்பு சட்டத்தின்படி செயல்படவில்லை, மாறாக மனு தர்மத்தின் அடிப்படையில் தான் செயல்பட்டு வருகிறது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

நாம் தமிழர் - மதிமுக கட்சி இடையே மோதல்:

கடந்த 2018 ஆம் ஆண்டு திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சிக்கும் ம.தி.மு.க வினருக்கும் நடைபெற்ற மோதல் தொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். அந்த வழக்கு தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி பாபு முன்னிலையில் ஆஜரானார். அவரை விசாரித்த நீதிபதி மீண்டும் அடுத்த மாதம் 18 ஆம் தேதி ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.

தேசியக் கல்வி கொள்கையால் மாநில மொழிகள் இருக்காது:

நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தேசியக் கல்வி கொள்கையால் மாநில மொழிகள் இருக்காது; மத்திய அரசின் நோக்கமே அதுதான்,  இந்தி மற்றும் சமஸ்கிருதம் மட்டும்தான் இருக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம் என்று சீமான் கூறினார். தமிழை உலகின் மூத்த மொழி என்றும் தொன்மையான மொழி என்றும் கூறி வரும் பிரதமர் மோடி,  அந்த மொழிக்கு முக்கியத்துவம் அளிக்காமல், ஏன் இந்திக்கு முக்கியத்துவம் அளிக்கிறார் என்று கேள்வி எழுப்பினார்.

இதையும் படிக்க: அதிமுக ஆட்சியில் அடித்த ஷாக்...ஸ்டாலினுக்கு இப்போ அடிக்கவில்லையா?

மனுதர்மத்தின் அடிப்படையில் செயல்படுகிறது:

சமீபத்தில் இந்துக்குள் யாரெல்லாம் அடங்குவர் என்பது குறித்து ஆ.ராசா பேசிய சர்ச்சை கருத்தானது அவருடைய சொந்த கருத்து இல்லை; மனுதர்மத்தில் என்ன இருக்கிறதோ அதை தான் அவர் பேசியிருந்தார். மனு தர்மத்தின் அடிப்படையில் தான் நாட்டில் அனைத்தும் நடக்கிறது. புதிய கல்விக் கொள்கையே மனு ஸ்மிருதி அடிப்படையில் தான் வகுக்கப்பட்டுள்ளது. ஜெய் ஸ்ரீராம் கோஷம், ஒரே நாடு, ஒரே வரி போன்றவை எல்லாம் அரசியலமைப்பு சட்டத்தில் இருக்கின்றதா? அதில் இல்லாததை எல்லாம் மனு ஸ்மிருதி அடிப்படையில் செய்து கொண்டு இருக்கின்றார்கள். ஆகவே, நாடு அரசியல் அமைப்பின்படி செயல்படாமல், மனு தர்மத்தின் அடிப்படையில் செயல்படுவதாக சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.