நியூட்ரினோ திட்டத்திற்கு அனுமதி கிடையாது... தமிழக அரசு அதிகாரிகள் தகவல்...

நியூட்ரினோ திட்டம் அமைக்க ஒரு போதும் தமிழக அரசு அனுமதிக்காது என்று தமிழக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நியூட்ரினோ திட்டத்திற்கு அனுமதி கிடையாது... தமிழக அரசு அதிகாரிகள் தகவல்...

தேனி மாவட்டம் தேவாரம் அருகிலுள்ள பொட்டிபுரம் ஊராட்சியில் உள்ள அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ அணு ஆராய்ச்சி தொடர்பாக 2010ம் ஆண்டு ஒன்றிய அரசு ரூ.1320 கோடி செலவில் நியூட்ரினோ திட்டம் அமைக்கப்படும் என அறிவித்தது.

இந்த மலையில் 1500 மீட்டர் ஆழத்தில், 50 டன் எடை கொண்ட உலகின்  பெரிய மின்காந்தம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்தத் திட்டம் அமைப்பதற்கு தமிழகத்திலுள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என மதிமுக மற்றும் பூவுலகின் நண்பர்கள் ஆகியோர் சார்பில் நீதுமன்றத்தில் வழக்கும்  தொடரப்பட்டது. 2017 ஆம் ஆண்டு தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் விதித்த தீர்ப்பில், நியூட்ரினோ திட்டத்திற்கு காட்டுயிர் வாரிய அனுமதி பெறாமல் இந்த திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில் கடந்த மே மாதம் 20ஆம் தேதி நியூட்ரினோ திட்டத்திற்கு காட்டுயிர் வாரிய அனுமதி கேட்டு தமிழக வனத்துறை இடம் டாடா அணு ஆராய்ச்சி நிறுவனம் விண்ணப்பத்திருந்தது. 

இந்த அனுமதி கிடைத்து விட்டால் நியூட்ரினோ ஆய்வுக் கூடம் அமைக்கும் பணி தொடங்கப்படும் என்ற தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.  இந்நிலையில் தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்று கூடிய மு க ஸ்டாலின் தலைமையிலான அரசு இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.

கடந்த வாரம் மத்திய அமைச்சர் பியூஸ் கோயிலை சந்தித்த தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழக அரசின் இந்த நிலைப்பாட்டை மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நியூட்ரினோ திட்டத்தை ஒருபோதும் செயல்படுத்த மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்ததாக தொழில்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com