50 : 50 கேட்கும் ஓ.பி.எஸ்., 70 : 30 தான் என்று அடம்பிடிக்கும் ஈ.பி.எஸ்., - அ.தி.மு.க.வில் வெடித்த அடுத்த பிரச்சனை...

அதிமுகவில் உட்கட்சித் தேர்தலில் எந்த அணிக்கு எத்தனை சதவீதம் இடங்களை ஒதுக்குவது என்கிற பஞ்சாயத்துதான் அதிமுகவில் இப்போது பரபரப்பாக நடந்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

50 : 50 கேட்கும் ஓ.பி.எஸ்., 70 : 30 தான் என்று அடம்பிடிக்கும் ஈ.பி.எஸ்., - அ.தி.மு.க.வில் வெடித்த அடுத்த பிரச்சனை...

சென்னையில் அதிமுகவின் செயற்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் 7-ந் தேதி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர தேர்தல் நடைபெறும்; உட்கட்சி தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு போட்டியின்றி ஓபிஎஸ்சும், இபிஎஸ்சும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டனர்.

டிசம்பர் 13 முதல் டிசம்பர் 23-ந் தேதி வரை அதிமுகவின் கிளைக்கழகம் உள்ளிட்ட உட்கட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் டிசம்பர் 13,14; 2-வது கட்ட தேர்தல் டிசம்பர் 22, 23 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. 

கிளைக் கழகச் செயலாளர், அவைத் தலைவர், இணைச் செயலாளர், துணைச் செயலாளர்கள், பொருளாளர், மேலமைப்புப் பிரதிநிதிகள், பேரூராட்சி வார்டு கழகச் செயலாளர், அவைத் தலைவர், இணைச் செயலாளர், துணைச் செயலாளர்கள், பொருளாளர், மேலமைப்புப் பிரதிநிதிகள், நகர வார்டு கழக செயலாளர், செயலாளர்கள், பொருளாளர்,மேலமைப்புப் பிரதிநிதிகள், மாநகராட்சி வட்டக் கழக செயலாளர், அவைத் தலைவர், இணைச் செயலாளர், துணைச் செயலாளர்கள், பொருளாளர்,மேலமைப்புப் பிரதிநிதிகள் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது.

இந்த தேர்தலில் தங்களின் ஆதரவாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்; அதனால், அந்த பதவிகளில் 50: 50 என்கிற சதவீத கணக்கில் பிரிக்கப்பட வேண்டும் என ஓபிஎஸ் கோரிக்கை வைத்திருக்கிறார். ஆனால், எப்போதும் போல இதற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளார் எடப்பாடி. அதாவது, 70: 30 என்கிற சதவீதத்தில் பதவிகள் பிரிக்கப்பட்டு அதில் அவரவர்களின் ஆதரவாளர்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ள திட்டமிட்டுக்கொள்ள வேண்டும் என சொன்னாராம் எடப்பாடி

ஆனால், இதனை ஓபிஎஸ் ஏற்காததால் கடந்த 3 நாட்களாக அதிமுகவின் மேல் மட்டத்தில் பஞ்சாயத்து நடக்கிறது. இது ஒருபுறமிருக்க, நீங்க ரெண்டு பேரும் 50 க்கு 50 என கணக்குப் போட்டால், நாங்க எங்கே போறது என மாஜி அமைச்சர்களும் மாவட்ட செயலாளர்களும் போர்க்கொடி உயர்த்தியிருக்கிறார்கள். அப்போது, அந்த அந்த மாவட்டத்தில் நடக்கும் உள் கட்சி தேர்தலில் நாங்கள்தான் நிர்வாகிகளை தேர்ந்தெடுப்போம். இதில் தலைமை தலையிடாமல் இருப்பது நல்லது என்றும் அவர்கள் கூறியிருக்கின்றனர்.