பாறை உருண்டு விழுந்த விபத்தில் 4 பேர் சிக்கி தவிப்பு..! உரிமையாளர் கைது

நெல்லை அருகே கல்குவாரியில் பாறை உருண்டு விழுந்த விபத்தில் 4 பேர் பாறைகளுக்குள் சிக்கித் தவித்து வரும் நிலையில், குவாரியின் உரிமையாளர் சங்கரநாராயணன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாறை உருண்டு விழுந்த விபத்தில் 4 பேர் சிக்கி தவிப்பு..! உரிமையாளர் கைது

முன்னீர்பள்ளம் அருகே அடை மதிப்பான் குளம் கிராமத்தில் வெங்கடேஸ்வரா என்ற பெயரில் கல்குவாரி இயங்கி வருகிறது. அங்கு வழக்கம் போல் கற்களை ஏற்றும் பணி நடைபெற்ற நிலையில், நள்ளிரவில் பணி நடந்து கொண்டிருந்த இடத்தில் திடீரென மிகப்பெரிய பாறை உருண்டு விழுந்தது. இதில் 2 லாரிகள், 2 ஹிட்டாச்சிகள் மாட்டிக்கொண்ட நிலையில், அதில் இருந்த 6 பேர் உள்ளே சிக்கிக்கொண்டனர்.

தகவலறிந்து தீயணைப்புத்துறையினர் சென்ற நிலையில், மழை பெய்து வந்ததாலும் 300 அடி பள்ளம் என்பதாலும் மீட்புப்பணியில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் காற்றாலைகளில் பயன்படுத்தப்படும் ராட்சத கிரேன் கொண்டு மீட்புப்பணி நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து விபத்தில் சிக்கிய ஹிட்டாச்சி ஆபரேட்டர் முருகன் மற்றும் விஜய் ஆகியோர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

இவர்கள் கொடுத்த தவலின் பேரில் விபத்தில் 3 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்புபணிகளை துரிதப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது. விபத்து நடந்த இடத்தில் மேலும் ஒரு பாறை உருண்டு விழுந்த நிலையில், மீட்புப் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே விபத்தில் சிக்கியுள்ளோரை மீட்க பொன்னாக்குடி மெயின் சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் தடியடி நடத்திய நிலையில், 22 பேர் கைது செய்யப்பட்டதோடு 60க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் செல்வகுமார் என்பவரின் தாய், மகனை மீட்குமாறு கண்ணீர் விட்டுக் கதறும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.